அன்பின் பொன்விதியை ஒருபோதும் மறவாதீர்கள்
பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத்.7,12) என்ற பொன் விதியை ஒருபோதும் மறவாதீர்கள்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியானது.
மேலும், இங்கிலாந்திலுள்ள, வரலாற்று புகழ்பெற்ற Buckfast கடுந்துறவு சபை இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் ஆயிரமாம் ஆண்டு நிகழ்வில் தனது பிரதிநிதியாக கலந்துகொள்வதற்கு, ஸ்டாக்கோல்ம் ஆயர், கர்தினால் Anders Arborelius அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பெனடிக்ட் துறவு சபையினரின் Buckfast கடுந்துறவு இல்லம், 1018ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இல்லத்தின் ஆயிரமாம் ஆண்டு நிகழ்வுகள், மே 24, வருகிற வியாழக்கிழமையன்று நடைபெறுகின்றன.
இன்னும், போலந்து நாட்டிலுள்ள Katowice நீதி மற்றும் சமூக அன்பு அன்னை மரியா திருத்தலம் அர்ச்சிக்கப்பட்டதன் ஏழாம் நூற்றாண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு, கத்தோலிக்க கல்வி பேராயத்தின் முன்னாள் தலைவர், கர்தினால் Zenon Grocholewski அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வுகள் மே 28ம் தேதி நடைபெறுகின்றன.
இன்னும், சிலே நாட்டில் அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள, அந்நாட்டில் பணியிலிருக்கும் 31 ஆயர்கள், தங்களின் பதவி விலகலை, எழுத்து வடிவில் திருத்தந்தையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
சிலே நாட்டில் அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் குறித்து, இவ்வாரத்தில் வத்திக்கானில் அந்நாட்டின் 34 ஆயர்கள், திருத்தந்தையுடன் சேர்ந்து, மூன்று நாள் கூட்டம் நடத்தினர்.
ஆதாரம் : வத்திக்கான்
Comments are closed.