மறையுரைச் சிந்தனை இயேசுவின் அன்பும் பேதுருவின் மனமாற்றமும்

பிரபல சிறுகதை எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் எழுதிய சிறுகதை ‘The Rependent Sinner’. இச்சிறுகதையில் வரும் மனிதர் தன்னுடைய எழுபது வயது வரைக்கும் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, சாகும் தருவாயில் தனது குற்றத்தை உணர்ந்து இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்பார். அப்போது அவருடைய ஆன்மா மேலே எழுந்து சென்று விண்ணகத்தின் வாசலைத் தட்டும்.

வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, ஒருவர் வந்து, “யார் நீ?” என்று கேட்பார். அதற்கு அந்த மனிதரோ, “நான் ஒரு பாவி, எனக்கு விண்ணகத்தின் வாசலைத் திறந்துவிடும்” என்று கேட்பார். வந்தவரோ, “அதெல்லாம் முடியாது, பாவிகளுக்கு இங்கே இடமில்லை, தயவுசெய்து நீங்கள் போகலாம்” என்பார். உடனே அந்த மனிதர், “ஐயா! நீங்கள் யாரென்று எனக்குத் தெரிவில்லை. உங்களுடைய முகத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. இப்போது நீங்கள் யாரென்று நான் தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்பார். அதற்கு வாசலைத் திறக்க வந்தவர், “நான்தான் பேதுரு” என்பார். “நீங்கள்தான் பேதுருவா! ஐயா! நீங்கள் இயேசுவோடு இருந்தபோது அவரை மும்முறை மறுதலித்தீர்களே, நீங்கள் செய்த குற்றத்தை இயேசுவும் மன்னித்து ஏற்றுக்கொண்டாரே, அப்படிப்பட்ட நீங்களா என்னை விண்ணகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கிறீர்கள்” என்பார் வந்தவர். இதைக் கேட்டு பேதுருவால் எதுவும் பேசமுடியாது அமைதியாக இருப்பார்.

பேதுரு அமைதியானதைத் தொடர்ந்து அந்த மனிதர் மீண்டுமாக கதவைத் தட்டுவார். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு தாவீது அரசர் வந்து கதவைத் திறப்பார். கதவைத் திறந்ததும் அவர் அந்த மனிதரிடம், “ஐயா! நீங்கள் யார்? உங்களுக்கு என்னவேண்டும்?” என்று கேட்பார். உடனே அந்த மனிதர், “ஐயா நான் ஒரு பாவி, ஆனால், இப்போது என்னுடைய குற்றத்தை உணர்ந்திருக்கின்றேன். எனக்காக அருள்கூர்ந்து விண்ணகத்தின் வாசலைத் திறந்துவிடும்” என்றார். உடனே தாவீது அரசர் அவரிடம், “பாவிகளுக்கு எல்லாம் இங்கே இடமில்லை. நீர் போகலாம்” என்று சொல்லி அவரை விரட்டுவார். உடனே அந்த மனிதர் தாவீது அரசரிடம், “ஐயா! நீங்கள் உரியாவைக் கொன்றுபோட்டுவிட்டு, அவருடைய மனைவியை அபகரித்துக்கொள்ளவில்லையா? பின்னர் உங்களுடைய குற்றத்தை உணர்ந்து மனமாறவில்லையா? அப்படிப்பட்ட நீங்கள் இப்படிச் சொல்லலாமா?” என்று கேட்பார். இதற்குக் தாவீது அரசரால் ஒன்றும் சொல்லமுடியாமல் போகவே, அமைதியாவார்.

இதைத் தொடர்ந்து அந்த மனிதர் மீண்டுமாக விண்ணகத்தின் கதவைத் தட்டுவார். சத்தம் கேட்டு அன்பின் அப்போஸ்தலரான யோவான் அங்கு வருவார். வந்தவர் அந்த மனிதரிடம், “நீர் யார்? உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்பார். அவரும் முன்பு சொன்ன பதிலையே சொல்வார். அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு யோவான் அவருக்குப் பதிலளிக்க வாயைத் திறப்பார். அதற்குள் அந்த மனிதர், “தூய யோவானே! நீங்கள்தான் அன்பைக் குறித்து அதிகமாக எழுதியவர். உங்களுடைய கடைசிக் காலத்தில் ‘ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும்’ என்று போதித்தவர். அப்படிப்பட்ட நீங்கள் என் குற்றங்களைப் பொறுத்துக்கொண்டு, என்மீது அன்பைப் பொழிந்து, எனக்கு விண்ணகத்தின் வாசலைத் திறந்துவிடக்கூடாதா?” என்று கெஞ்சிக் கேட்பார்.

அந்த மனிதர் இவ்வாறு பேசியதைத் தொடர்ந்து யோவான் அவர்மீது பரிவுகொண்டு அவரை விண்ணகத்திற்குள் ஏற்றுக்கொள்வார்.

Comments are closed.