திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருமுழுக்கின் வழி இயேசுவை ஆடையாக அணிகிறோம்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருமுழுக்கின் வழி இயேசுவை ஆடையாக அணிகிறோம

மே,16,2018. கோடைகாலம் துவங்கியுள்ளது என்று உணரத் துவங்கிய சில நாட்களிலேயே, வழக்கத்திற்கு மாறாக மீண்டும் குளிர்காலம் வந்துவிட்டதோ என்ற அச்சம் மேலோங்க, இத்தாலி முழுவதும் மழையும் குளிரும் தலைகாட்டி வருகின்றன. கடந்த வாரமும், இவ்வாரத்தில் திங்களும் செவ்வாயும், மழைத் தூறலைக் கண்டிருக்க, இப்புதன் காலை சூரிய ஒளியுடனும், மிதமான குளிருடனும் உரோம் நகர் விடிந்தது. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு திருமுழுக்கு குறித்த மறைக்கல்வியை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு சகோதர சகோதரிகளே, திருமுழுக்கு குறித்து நம் மறைக்கல்வித் தொடரின் இறுதிப் பகுதியில் இன்று, இவ்வருளடையாளத்தின் அருட்கொடைகளை விவரிக்கும் சடங்குமுறைகளை நோக்குவோம். பழைய பாரம்பரியத்தின்படி, புதிதாக திருமுழுக்குப் பெறுவோர், கிறிஸ்துவில் தங்கள் புதிய வாழ்வைக் குறிக்கும் விதமாக, வெள்ளை ஆடையால் உடுத்தப்படுவர். மேலும், இந்த வாழ்வு முழுவதும் அது கறைபடாமல் காக்கப்பட வேண்டும் எனவும் கேட்கப்படுவர். தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் கூறியுள்ளதுபோல், திருமுழுக்குப் பெற்றவர்கள் கிறிஸ்துவை ஆடையாக அணிந்துள்ளதால் (கலா.3:27), அவர்கள், அனைத்து நற்பண்புகளையும், குறிப்பாக, பிறரன்பை நன்முறையில் வளர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில், அன்பே அனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும் (கொலேசி. 3:14). அதுபோல், பாஸ்கா மெழுகுதிரியிலிருந்து ஏற்றப்பட்ட சிறு மெழுகுவர்த்திகள், இயேசுவின் ஒளியையும், அவர் அன்பின் கதகதப்பையும் குறித்து நிற்கின்றன.
மேலும், இந்த அன்பு, பெற்றோரின் மற்றும் ஞானப்பெற்றோரின் உதவியுடன், கிறிஸ்தவ வாழ்வு குறித்த கல்வியின் வழியாக மேலும் பேணி வளர்க்கப்பட வேண்டும். இந்த சடங்குகள், இவ்வுலகில் திருஅவையோடு நம் ஒன்றிப்பை மட்டும் தூண்டவில்லை, மேலும், நம் ஒளியாக என்றென்றும் முடிவின்றி இருக்கப்போகின்ற வானக எருசலேமில் அது நிறைவேறுவதையும் குறித்து நிற்கின்றது (திருவெளி. 22:5). திருமுழுக்குச் சடங்கு, ‘வானகத்திலுள்ள எங்கள் தந்தாய்’ என்ற செபத்துடன் நிறைவுறுவது, கிறிஸ்துவில் நாம் பெற்றுள்ள கடவுளின் தத்துப் பிள்ளைகளுக்குரிய நம் மாண்பின் வெளிப்பாடாகும். திருமுழுக்கு நாளில் நாம் பெற்ற அருள்கொடைகளை நெஞ்சார நேசிப்பதுடன், நம் இதயங்களில் வாழும் தூய ஆவியானவர் நம் வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் நம்மை வழிநடத்திட அவரை அனுமதிப்போம்.
இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமி மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் எழுந்துள்ள பதட்ட நிலைகள் குறித்து தன் கவலையை வெளியிட்டார். ‘இன்று அப்பகுதியில் எழுந்துள்ள தொடர் வன்முறைகள், அமைதி, கலந்துரையாடல், பேச்சு வார்த்தைகள் ஆகியவைகளின் பாதைகளைவிட்டு மக்களைத் தூர விலக்கிச் செல்வதாக உள்ளன. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து என் ஆழ்ந்த வேதனையை வெளியிடுவதோடு, அப்பகுதியில் துன்புறும் மக்களோடு, செபத்துடன், என் அருகாமையைத் தெரிவிக்கிறேன். வன்முறை வழியாக அமைதியைக் கொணர முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். போர் என்பது போரையும், வன்முறை என்பது வன்முறையையுமே கொணரும். எனவே, கலந்துரையாடல், நீதி, அமைதி என்பதற்குரிய அர்ப்பணத்தை புதுப்பிக்குமாறு அங்கு மோதலில் ஈடுபட்டுள்ளோரையும், அனைத்துலக சமூகத்தையும் விண்ணப்பிக்கிறேன்’ என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று துவங்கவுள்ள இரமதான் மாதத்தையொட்டி தன் வாழ்த்துக்களை வெளியிட்டதோடு, செபத்தையும் உண்ணா நோன்பையும் உள்ளடக்கிய இந்த மாதம், இறைவனின் பாதையில், அதாவது, அமைதியின் பாதையில் நடைபோட்டிட உதவுகின்றது எனவும் எடுத்தியம்பி, இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Comments are closed.