ஆயர்கள் தம் மந்தைகள் மீது அக்கறையாய் இருப்பார்களாக.. திருத்தந்தை

ஆயர்கள் தம் மந்தைகள் மீது அக்கறையாய் இருப்பார்களா

மே,15,2018. தூய ஆவியாருக்குப் பணிந்து, தம் மந்தையின் மீது அன்பு செலுத்திய திருத்தூதர் பவுல் அவர்களின் எடுத்துக்காட்டை அனைத்து ஆயர்களும் பின்பற்ற வேண்டுமென்று தான் செபிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் மறையுரையாற்றினார்.
திருத்தூதர் பவுல், தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு, எபேசு திருஅவையின் மூப்பர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று, எருசலேமுக்குச் சென்றது பற்றிச் சொல்லும், இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தை (தி.ப.20,17-27) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.
சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் அவர்களின் இச்செயல், உள்ளத்தை உருக்குவது, மற்றும், ஒவ்வோர் ஆயரும், தன் பணியைவிட்டு விலகும்போது கடைப்பிடிக்கவேண்டிய வேண்டிய பாதையாக உள்ளது என்று கூறினார்.
எபேசு திருஅவையின் மூப்பர்களிடமிருந்து விடைபெறும்போது, பவுலடிகளார் தான் ஆற்றிய பணிகளைச் சீர்தூக்கிப் பார்த்தார் என்றும், தன் பாவங்கள் மற்றும், தன்னை மீட்ட இயேசு கிறிஸ்துவின் சிலுவை பற்றி பெருமைப்பட்டார் என்றும் உரைத்த திருத்தந்தை, பவுலடிகளார் தூய ஆவியாருக்குச் செவிசாய்த்தார் என்று கூறினார்.
பவுலடிகளார், எபேசு திருஅவையில் ஆற்றிய பிரியாவிடை உரையில், மூப்பர்கள் தம் மந்தையைக் காத்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறினார் என்றும், பவுல் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவே மாபெரும் அன்பாக இருந்தார் என்றும், அடுத்து, விசுவாசிகளாகிய தன் மந்தை என்றும், திருத்தந்தை மறையுரையில் கூறினார்.
இந்த வாசகப் பகுதியை வாசிக்கும்போது, தனது நேரம் பற்றியும், நான் ஓர் ஆயர், நானும் இப்பணியிலிருந்து விலக வேண்டும் என தன்னைப் பற்றியும் சிந்தித்ததாகக் கூறியத் திருத்தந்தை, இந்நேரத்தில் அனைத்து ஆயர்களையும் நினைத்துப் பார்க்கின்றேன், அவர்கள் தங்கள் பணியிலிருந்து விலகும்போது, திருத்தூதர் பவுல் போன்று செயல்பட ஆண்டவர் அருள் வழங்குமாறு செபிப்பதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Comments are closed.