உரோம் மறைமாவட்டத்தின் ஆன்மீக நோய்கள் பற்றி திருத்தந்தை

உரோம் மறைமாவட்டத்தின் ஆன்மீக நோய்கள் பற்றி திருத்தந்த

மே,15,2018. இறைவன் மீது தாகம் கொள்வதற்கு நம்மில் எழும் உணர்வுகளுக்கும், இதே மாதிரி உரோம் நகர மக்கள் எழுப்பும் குரல்களுக்கும் அஞ்சாமல் செவிமடுக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறைமாவட்ட விசுவாசிகளிடம் இத்திங்கள் மாலையில் கூறினார்.
இவ்வாண்டு தவக்காலத்தில், ஆன்மீக நோய் குறித்து, உரோம் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குத்தளங்களிலும் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சியின் நிறைவாக, உரோம் ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும் பொதுநிலை விசுவாசிகளைச் சந்தித்து, அப்பயிற்சியின் கனிகள் பற்றியும் கேட்டறிந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில், இச்சந்திப்பை நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையின் உரோம் மறைமாவட்ட பிரதிநிதி பேராயர் ஆஞ்சலோ தெ தொனாதிஸ் அவர்கள், இச்சந்திப்பில் கேட்ட நான்கு கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.
உரோம் மறைமாவட்டத்தின் ஆன்மீக நோய்கள் பற்றி விளக்கிய திருத்தந்தை, ஆண்டவர் மட்டுமே நம்மைக் குணப்படுத்த வல்லவர் என்றும், நம்மை நாமே குணப்படுத்த இயலும் என நினைக்கக் கூடாது என்றும், நமக்கு ஒருவர் தேவைப்படுகின்றார், அவரே நம் ஆண்டவர் என்றும் கூறினார்.
ஆன்மீகத் தோழமைப் பண்பைக் கொண்டுள்ளவர்களிடம் நம் ஆறுதலைத் தேட வேண்டும் என்றும், இந்தப் பண்புள்ளவர்கள், அருள்பணியாளரோ, பொதுநிலையினரோ, இளைஞரோ, வயதானவரோ, யாராகவும் இருக்கலாம் என்றும், இயேசுவோடு, யாராவது ஒருவரோடு, மற்றும் திருஅவையோடு பேசுவது இதற்கு முதல்படி என்றும் திருத்தந்தை கூறினார்.
கடவுள் மீது நாம் கொண்டிருக்கும் தாகம் குறித்து எழுப்பும் குரல்களை, அவர் எவ்வாறு நோக்குகிறார் மற்றும் செவிசாய்க்கிறார் என்பதையும் விளக்கிய திருத்தந்தை, கடவுளிடம் குரல் எழுப்புகையில், நம் வாழ்வு, தேவையற்ற செயல்கள்மீது நாட்டம் கொள்ளும்போது, அவை நம் உறவுகளை அகற்றி விடுகின்றது மற்றும், எதிர்காலம் குறித்த அச்சமும் நிலவுகின்றது என்று கூறுகின்றோம் எனவும் கூறினார்.
மக்கள் எழுப்பும் குரல்களுக்கு நம் கதவுகளை மூடிக்கொள்கின்றோமா என்ற கேள்வியையும் எழுப்பிய திருத்தந்தை, எதற்கும் அஞ்சாமல் முன்னோக்கிச் செல்லுமாறு, தனது மறைமாவட்ட மக்களை ஊக்கப்படுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Comments are closed.