இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்
தந்தையை இழந்த பின், உயர் கல்விக்கு பணமின்றி தவித்த இந்து மாணவி ஒருவரின் கல்விச் செலவு அனைத்தையும் முஸ்லிம் சமூகத்தினர் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் அருகே, புழக்கத்திரி அருகே கொட்டுவாட், வடக்கத்தோடி காலனியைச் சேர்ந்தவர் வி.டி.ரமேஷ். இவரின் மனைவி சாந்தா. இவர்களின் மகள் சத்யவாணி. பிளஸ் 2 முடித்த சத்யவாணி, மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ரமேஷ், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்காக இலட்சக்கணக்கில் செலவு செய்தும், ரமேஷ், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
கணவரை இழந்த சாந்தா, குடும்பத்தைத் தொடர்ந்து நடத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார். அதில், மகளின் படிப்புச் செலவுக்கென உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பணம் கேட்டபோது, அவர்கள், உதவ முன்வரவில்லை.
இதையடுத்து, புழக்கத்திரி நகரில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் ஜமாத்துக்குச் சென்று சாந்தா தனது நிலையை எடுத்துக்கூறவே, சாந்தாவுக்கும், அவரின் மகள் சத்யவாணிக்கும் உதவ முஸ்லிம் சமூகத்தினர் உதவ முடிவு செய்தனர்.
தங்கள் சமூகத்தில் இருக்கும் பெரும் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், உதவ நல்உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து நன்கொடையாகப் பணம் பெற்றனர்.
அந்தப் பணத்தில், முதல்கட்டமாக, ஒருலட்சம் ரூபாயை சத்யவாணியின் கல்விக்கட்டணத்துக்கு அளித்து கல்விச்செலவு அனைத்தையும் ஏற்பதாக உறுதி அளித்தனர். அதுமட்டுமல்லாமல், சாந்தாவின் வாழ்வாதாரத்துக்கும் வழி செய்யும் வகையில் ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்றதோடு, அவர்களின் குடும்பத்தாருக்கும் உதவிய முஸ்லிம் சமூகத்தினரின் செயலை, சமூக ஊடகங்களில், பலரும் பாராட்டி வருகின்றனர்
Comments are closed.