திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருமுழுக்கில் புது வாழ்வு

உரோம் நகரில் செவ்வாய் மாலையும் இரவும் தொடர்ந்து பெய்துகொண்டிருந்த மழை, இப்புதன் காலையில் ஓய்வெடுக்க, திருந்தந்தையின் மறைக்கல்விக்கு செவிமடுக்க வந்த மக்களால் நிறைந்திருந்தது தூய பேதுரு வளாகம். திருமுழுக்கு குறித்து கடந்த சில வாரங்களாக புதன் மறைக்கல்வி உரைகளில் தன் எண்ணங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்க‌ள் பகிர்ந்துவரும் நிலையில், இப்புதனன்று முதலில், தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் 6ம் பிரிவு, 3ம் மற்றும் 4ம் திருவசனங்கள் வாசிக்கப்பட்டன.

‘திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்’ என்ற வரிகள் வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையும் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அன்பு சகோதர சகோதரிகளே! திருமுழுக்கு குறித்த நம் இப்புதன் தொடரில், இன்று, திருமுழுக்கின் மையச் சடங்குமுறை நோக்கிச் செல்வோம். தண்ணீர் ஊற்றப்படுவது, மற்றும் தூய மூவொரு கடவுளிடம் வேண்டுவதன் வழியாக, நாம், இயேசுவின் மரணம் மற்றும் புது வாழ்வுக்கான உயிர்ப்பில் மூழ்குகிறோம். இவ்வாறு புதிதாகப் பிறந்த நாம், பாவம் எனும் சீர்கேட்டிலிருந்து புதிய வாழ்வுக்கு கடந்து சென்று, புதிய படைப்பாக மாறுகிறோம். தூய ஆவியானவரின் அருள்பொழிவின் வழியாக, கிறிஸ்துவில் நாம், திருஅவையை நம் ஆன்மீக அன்னையாகக் கொண்டு, தந்தையாம் இறைவனின் தத்துப் பிள்ளைகளாக மாறுகிறோம். இந்த உறவு நிரந்தரமானது, மற்றும், நம் ஆன்மாவில் அழிக்க முடியாத அடையாளமாக முத்திரையிடப்பட்டுள்ளது. ஆகவே, கிறிஸ்துவின் உடலின் அங்கத்தினர்களாக மாறியுள்ள நாம், பாவத்தை ஒதுக்கவும், இறைவனோடு நம் வாழ்வை மேலும் நெருக்கமாகக் கொண்டு வரவும், நம்மை அர்ப்பணிக்க வேண்டும். திருமுழுக்குத் தண்ணீரில் நாம் புதுப்பிறப்படைந்ததைத் தொடர்ந்து, ஒரு குருவாக, இறைவாக்கினராக, அரசராக கிறிஸ்து ஏற்றிருக்கும் பாத்திரத்தில் நாமும் பங்குபெறும் அடையாளமாக திருமுழுக்கு எண்ணையால் நாம் திருப்பொழிவு செய்யப்படுகிறோம். கடவுளின் திருக்குருத்துவக் குடும்பத்தின் அங்கத்தினர்களாக நாம், இறைவனுக்குகந்த பலியாக நம் வாழ்வை தினமும் ஒப்புக்கொடுக்க அழைப்புப் பெற்றுள்ளோம். அரசகுல மற்றும் இறைவாக்கு மக்களாகிய நாம், நம் அன்பு மற்றும் விசுவாச சாட்சியம் வழியாகவும், இயேசுவைப் பின்பற்றி நம் சகோதர சகோதரிகளுக்கு அன்புடன்கூடிய சேவை புரிவதற்கான அர்ப்பணத்தின் வழியாகவும், கிறிஸ்துவின் அரசை அறிக்கையிட அழைக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரபு மொழியினருக்கு வழங்கிய வாழ்த்துக்குப் பின்னர், சிரியா நாட்டின் அமைதிக்காகச் செபிக்குமாறு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார். அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த மே மாத்தில் ஒவ்வொரு நாளும் செபமாலையை செபித்து, குறிப்பாக, சிரியாவின் மற்றும் உலகமனைத்தின் அமைதிக்காக வேண்டுவோம், என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Comments are closed.