கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஆயர் கவலை

அடிப்படைவாத இந்துக்களின் வன்முறையும், பாகுபாடுகளும் அதிகரித்து வருவது குறித்து தமிழ்நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர் என்று, தமிழ்நாட்டின் கத்தோலிக்க ஆயர் ஒருவர் தெரிவித்தார்.
Aid to the Church in Need எனப்படும், பன்னாட்டு கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்திடம் இவ்வாறு கூறிய, திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள், இந்தியாவில், இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவுகள் பலவீனமடைந்து வருவதற்கு முக்கிய காரணம், நரேந்திர மோடி அவர்கள் அதிகாரத்திற்கு வந்ததே எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
பிஜேபி கட்சி ஆட்சிக்கு வருமுன்னர், இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவுகள் மிக அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் இருந்தன என்றும், மோடி அவர்கள் பிரதமரான பின்னர், இந்து அடிப்படைவாதக் குழுக்கள் மிகவும் சக்திமிக்கவையாக மாறியுள்ளன என்றும் கருத்து தெரிவித்துள்ளார் ஆயர் பால்சாமி.
தமிழ்நாட்டின் குறைந்தது 16 நகரங்களில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் ஏறத்தாழ இருபதாயிரம் கிறிஸ்தவர்கள், பேரணிகளை நடத்தி, கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்ததையும் குறிப்பிட்டார், ஆயர் பால்சாமி.
இந்தியாவில் பிஜேபி கட்சி ஆட்சியில் இருக்கும்வரை, கிறிஸ்தவர்களுக்கு வாழ்வு கடினமானதாகவே அமையும் என்று கவலை தெரிவித்த ஆயர் பால்சாமி அவர்கள், இவ்வாண்டு துவங்கியதிலிருந்து தமிழ்நாட்டில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக 15க்கும் மேற்பட்ட வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான்

Comments are closed.