தூய பீட்டர் நோலாஸ்கோ

ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்”

வாழ்க்கை வரலாறு

பீட்டர் நோலாஸ்கோ 1189 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள மாஸ் தேஸ் செயின்ட்ஸ் என்னும் இடத்தில் பிறந்தார். நோலாஸ்கோவின் குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம். அதே நேரத்தில் மக்களுடைய நன்மதிப்பை பெற்ற குடும்பம். இத்தகைய ஒரு குடும்பத்திலிருந்து வந்த நோலாஸ்கோ சிறிதளவுகூட ‘மேட்டிமை’ எண்ணம் கொண்டிருக்காமல், மிகவும் எளியவராக இருந்தார். ஏழைகளை அதிகமாக நேசித்தார், சேவை மனப்பான்மை உள்ளவராக விளங்கினார்.

இவருடைய காலத்தில் மூர் இனத்தவர் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களைப் பிடித்து அடிமைகளாக வைத்து, அவர்களை பல விதங்களில் சித்ரவதை செய்து வந்தார்கள். இதனைப் பார்த்த நோலாஸ்கோ, அடிமைகளாக இருந்த கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்னும் எண்ணம் கொண்டார். எனவே ‘மெர்சடேரியன்ஸ்’ என்னும் சபையைத் தோற்றுவித்தார். இதன்மூலம் அடிமைகளாக இருந்த கிறிஸ்தவர்களை மீட்பதற்காக அரும்பாடு பட்டார். முன்னதாக தன்னுடைய தந்தை வழி சொத்துகள் அனைத்தையும் விற்று நிறைய அடிமைகளை மீட்டெடுத்தார். இப்போது, தான் ஏற்படுத்திய சபையின் வழியாக, ஏராளமான அடிமைகளை மீட்டு விடுதலை அளித்தார்.

நோலாஸ்கோ, தான் ஏற்படுத்திய சபையில் இருந்த சகோதரர்களுக்குச் சொன்னதெல்லாம், “எப்பாடுபட்டாவது அடிமைகளாக இருக்கும் கிறிஸ்தவர்களை மீட்டெடுக்க வேண்டும், தேவைப்பட்டால் நீங்களும் அடிமைகளாகி விடுங்கள்” என்பதுதான். நோலாஸ்கோ சொன்னதைக் கேட்டு, அவருடைய சபையில் இருந்த சகோதரர்கள் அனைவரும் அதன்படி நடந்தார்கள். இதனால் நோலாஸ்கோவின் புகழ் எங்கும் பரவியது. இது அப்போது திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் கிளமென்ட் என்பவருடைய கவனத்திற்குப் போனது. அவர் நோலாஸ்கோவிடம், “அருட்சாதனக் கொண்டாங்களை நிறைவேற்ற நீர் குருவாக மாறினால்தான் முடியும். அதனால் குருவாக மாறு” என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை சொன்னதற்கு ஏற்ப நோலாஸ்கோ குருவாக மாறினார். அதன்பிறகு அவர் அடிமை நிலையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆன்மீக வாழ்வில் உயர பெரிதும் பாடுபட்டார்.

இப்படி அயராது பணிசெய்து வந்த நோலாஸ்கோ, 1256 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய நோலாஸ்கோவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. வறியோரிடத்தில் இரக்கம்

தூய நோலாஸ்கோவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம்முடைய மனதில் தோன்றுகின்ற எண்ணமெல்லாம் அவர் அடிமைகளிடம் கொண்டிருந்த அன்பும் கரிசனையும் அதற்காக அவர் மேற்கொண்ட பல்வேறு தியாகங்களும்தான். தூய நோலாஸ்கோவை நினைவுகூரக்கூடிய நாம், சமூகத்தில் வறிய நிலையில் இருக்கக்கூடிய ஏழைகள், அனாதைகள், கைவிடப்போட்டோர் இவர்கள்மீது நாம் அன்பும் கரிசனையும் அக்கறையும் கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் பிரஞ்சு காலனி ஆதிக்கத்திலிருந்து வியட்நாமை விடுவிக்க அரும்பாடு பட்ட ஹோசிமினைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

கல்லூரிக் காலங்களில் ஹோசிமின் மக்கள் விடுதலை இயக்கப் பணிகளில் ஈடுபட்டதால் கல்லூரியிலிருந்தே வெளியேற்றப்பட்டார். விடுதலைப் போருக்கு வியூகம் வகுக்க ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்தார். காடு மலை என பல இடங்களில் தங்கி பல்வேறு இடையூறுகளை எல்லாம் அனுபவித்தார். இத்தகைய தருணங்களில் போது அவர் விடுதலை வேட்கையுள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி ஆதிக்க வாதிகளுக்கு எதிராக அவர் போராடிக்கொண்டே இருந்தார். இதன் பலனாக வியட்நாமில் சுதந்தர சோசியலாட்சி மலர்ந்தது.

வியட்நாமிற்கு விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு ஹோசிமின் மேற்கொண்ட தியாகங்கள், அதன்மூலம் அவர் அடைந்த துன்பங்கள் அளப்பெரியது. அவற்றையெல்லாம் வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது. இன்று நாம் நினைவுகூருகின்ற தூய நோலாஸ்கோவும் அப்படித்தான் அடிமைகளை மீட்பதற்காக பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்.

ஆகவே, தூய நோலாஸ்கோவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று துன்பங்களை ஏற்றுக்கொள்ள முன்வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

Comments are closed.