அன்பு என்பது வார்த்தையல்ல, மற்றவருக்கான சேவை

அன்பு என்பது வெறும் வார்த்தையல்ல, மாறாக, மற்றவர்களுக்கு நாம் வழங்கும் சேவை நடவடிக்கை  என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் எனற முறையில் இஞ்ஞாயிறு மாலை, உரோம் மறைமாவட்டத்தின் தோர் தே ஸ்கியாவி என்ற ஊர் பங்குதளத்தை சந்தித்து திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரைப்படங்களில் பார்ப்பது போன்றதல்ல அன்பு, மாறாக, அது செயல்பாடுகளில் வெளிப்படுவது, என தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

நாம் இறையன்பில் நிலைத்திருக்கின்றோமா, அல்லது வெளியுலக கொண்டாட்டங்களில் அன்பை தேடியலைந்து கொண்டிருக்கின்றோமா என ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேள்வியெழுப்ப வேண்டும் என விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறரைப் பற்றி தவறாக பேசும்போதே நம்மிடம் அன்பில்லையென்றாகிவிடுகின்றது, ஆனால், கிறிஸ்து கற்பிக்கும் அன்போ, மற்றவர்களுக்காக உயிரையே கையளிக்கும் அளவுக்குச் செல்வதாகும்’ என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலிக்கு முன் அப்பங்குதளத்தில், மகிழ்வின் இல்லம்’  என்ற பெயரில், மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பதற்கென கட்டப்பட்டுள்ள ஓர் இல்லத்தை ஆசீர்வதித்து, திறந்து வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பலிக்கு முன்னர், கோவிலுக்கு வெளியே குழுமியிருந்த மக்களை சந்தித்து அவர்களின் சில கேள்விகளுக்கு பதிலும் வழங்கிய திருத்தந்தை, ஒரு சிறுவனின் கேள்விக்கு பதிலளித்த வேளையில், பெற்றோருக்காக ஒவ்வொரு குழந்தையும் செபிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான்

Comments are closed.