இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே!
கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ! எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.
நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?
தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும். – ஆமென்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Comments are closed.