குருத்துவ வாழ்வில் 18 ஆண்டுகள் நிறைவு செய்யும் எமது ஆலய குருக்களை வாழ்த்தி நிற்கின்றோம்

ஆசிரியராகிய கிறிஸ்துவின் பெயரால் யாவருக்கும் எடுத்துரைத்துப் போதகப் பணியைக் கடமையுணர்வுடன் நிறைவேற்றும். ஆண்டவரின் நெறிகளை மனதிற்கொண்டு, நீங்கள் படிப்பதை விசுவசிக்கவும், விசுவசிப்பதைப் போதிக்கவும், போதிப்பதைப் பின்பற்றவும் கருத்தாய் இருங்கள்.

எனவே உங்கள் போதனை இறைமக்களுக்கு ஊட்டமளிக்கும் உணவாய் இருக்கட்டும். உங்கள் வாழ்வின் நறுமணம் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக. இவ்வாறு உங்கள் சொல்லாலும் செயலாலும் கடவுளின் திருச்சபையாகிய ஆலயத்தைக் கட்டியெழுப்புங்கள்.

மேலும், கிறிஸ்துவின் அர்ச்சிக்கும் பணியையும் நீங்கள் நிறைவேற்றுங்கள். ஏனெனில், உங்கள் கையினால்தான் கிறிஸ்துவின் திருப்பலி அருட்சாதன முறையில் பீடத்தின்மீது ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. இப்பலியோடு விசுவாசிகளின் ஆன்மப் பலிகளை இணைத்து நிறைவுறச் செய்வதும் உங்கள் பணியே; ஆகவே நீங்கள் செய்வதன் உட்பொருளை உணர்ந்து கொள்ளுங்கள். நிகழ்த்தும் பலிக்கேற்றப்படி வாழ்க்கை நடத்துங்கள். அப்பலியில் ஆண்டவருடைய இறப்பு உயிர்ப்பு என்ற மறை நிகழ்ச்சிகளை நீங்கள் கொண்டாடுவதால் உங்களையே தியாகப் பலியாக்கிப் புத்துயிர் பெற்றவராய் வாழக்கருத்தாய் இருங்கள்.

திருமுழுக்கின் வழியாக, மனிதரை இறைமக்கள் கூட்டத்தில் சேர்ப்பது; ஒப்புரவு அருட்சாதனத்தால், கிறிஸ்துவின் பெயராலும் திருச்சபையின் பெயராலும் மன்னிப்பது, திரு எண்ணெய் பூசி நோயாளிகளுக்கு நலமளிப்பது, திருவழிபாடு நிறைவேற்றுவது; இறை மக்களுக்காக மட்டுமின்றி உலகம் அனைத்திற்காவும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களில் நன்றி கூறிப் புகழுரைத்து மன்றாடுவது – இவையாவும் உங்கள் கடமையாகும். நீங்கள் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்று கடவுளைச் சார்ந்தவற்றிற்கென மனிதரின் சார்பாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். எனவே பெரிய குருவாகிய கிறிஸ்துவின் பணியை மனமுவந்து மெய்யன்புடன் நிறைவேற்றுங்கள். உங்கள் நலத்தையன்று; கிறிஸ்துவுக்கு உரியவற்றையே தேடுங்கள்.

இறுதியாக அன்புமிக்க மகன்களே, திருச்சபையின் தலைவரும் ஆயருமான கிறிஸ்துவின் பணியைத் தொடர்ந்து நடத்துங்கள். நீங்கள் பணியாற்றும் மறைமாவட்டத்தின் ஆயருடனும், உங்கள் சபைத் தலைவருடனும் மனமொத்து, கீழ்ப்படிதலுடன் பணி புரியுங்கள். கிறிஸ்தவ விசுவாசிகளை ஒரே குடும்பமாக இணைக்கக் கருத்தாய் இருங்கள். இவ்வாறுதான் நீங்கள் அவர்களைக் கிறிஸ்து வழியாகத் தூய ஆவியில் தந்தையாகிய இறைவனிடம் கொண்டு சேர்க்க முடியும். நல்லாயனின் முன்மாதிரியை என்றும் உங்கள் கண்முன் நிறுத்தி அவர் பணிவிடை பெறுவதற்கன்று; பணிவிடை புரிவதற்கே வந்தார் என்றும், இழந்துபோனதைத் தேடி மீட்க வந்தார் என்றும் நினைவில் கொள்வீர்களாக.அனைத்து குருக்களுக்கும் எமது வாழ்த்துக்கள்

Comments are closed.