புனிதர் மார்கரெட் க்ளித்ரோவ் ✠

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மறைசாட்சியரில் ஒருவர் :
(One of the Forty Martyrs of England and Wales)

பிறப்பு : 1556
யோர்க், யோர்க்ஷைர், இங்கிலாந்து
(York, Yorkshire, England)

இறப்பு : மார்ச் 25, 1586
யோர்க், யோர்க்ஷைர், இங்கிலாந்து
(York, Yorkshire, England)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : டிசம்பர் 15, 1929
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம் : அக்டோபர் 25,1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

முக்கிய திருத்தலம் :
ஷேம்பில்ஸ், யோர்க், வடக்கு யோர்க்ஷைர், இங்கிலாந்து
(The Shambles, York, North Yorkshire, England)

நினைவுத் திருநாள் : மார்ச் 26

பாதுகாவல் :
பெண் வியாபார்கள், மாற்றப்பட்டவர்கள், மறைசாட்சியர், கத்தோலிக்க பெண்கள் சமூகம், இலத்தீன் பெரும் சமூகம்

புனிதர் மார்கரெட் க்ளித்ரோவ், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆங்கிலேய புனிதரும், மறைசாட்சியுமாவார். சில வேளைகளில், “யோர்க்கின் முத்து” (The Pearl of York) என்றும் இவர் அழைக்கப்படுவதுண்டு.

1556ம் ஆண்டு, வடக்கு இங்கிலாந்து (Northern England) நாட்டின் “யோர்க்ஷைர்” (Yorkshire) மாகாணத்தில் பிறந்த மார்கரெட் க்ளித்ரோவின் தந்தையார் பெயர் “தாமஸ்” (Thomas) ஆகும். நகரின் கௌரவமான மெழுகுதிரி வியாபாரியான இவர், 1564ம் ஆண்டு, மாநகர ஷெரிஃப் ஆகவும் பதவி வகித்தார். மார்கரெட்டின் தாயார் பெயர் “ஜேன் மிட்ல்டன்” (Jane Middleton) ஆகும். மார்கரெட்டுக்கு பதினான்கு வயதாகையில் இவரது தந்தை மரித்துப் போனார்.

நகரின் அரச பிரதானியும் (Chamberlain of the City), கசாப்பு (Butcher) வியாபாரியுமான “ஜான் க்ளித்ரோவ்” (John Clitherow) என்பவரை 1571ம் ஆண்டு, திருமணம் முடித்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. இவர்களது குடும்பம் “ஷேம்பில்ஸ்” (The Shambles) எனப்படும் பழைய தெருவில் வசித்தது. மார்கரெட் க்ளித்ரோவ், 1574ம் ஆண்டு, கத்தோலிக்க திருச்சபைக்கு மதம் மாறினார். இவரது கணவர் ஜான் க்ளித்ரோவ், எதிர் திருச்சபையைச் சேர்ந்தவராயினும், தமது சகோதரர் “வில்லியம்” (William) ஒரு கத்தோலிக்க குரு என்ற காரணத்தால், அவர் ஆதரவாகவே இருந்தார்.

எதிர் திருச்சபையின் தேவாலய சேவைகளில் கலந்துகொள்ளாததற்காக மார்கரெட்டுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அவரது கணவர் செலுத்தினார். தேவாலய சேவைகளில் கலந்துகொள்ளாததற்காக, முதன்முறையாக 1577ம் ஆண்டு மார்கரெட் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மேலும் இரண்டு முறை, “யோர்க் கேஸ்ட்டில்” (York Castle) என்றழைக்கப்படும் சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டார். இவரது மூன்றாவது மகனான வில்லியம் (William) இங்கேதான் பிறந்தான்.

மார்கரெட், கத்தோலிக்க குருக்களுக்கு தங்க இடம் கொடுப்பதிலும், அவர்களைப் பராமரிப்பதிலும் தமது உயிரையே பணயம் வைத்திருந்தார். தமது வீட்டுடன் ஒட்டியிருந்த அறையை குருக்கள் மறைந்து வசிப்பதற்கு கொடுத்திருந்த மார்கரெட், தமது வீட்டின் சிறிது தூரத்திலிருந்த இன்னொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து குருக்களுக்கு அளித்திருந்தார். குருக்கள் மறைவாக வசித்த அங்கேயே திருப்பலிகளும் நிகழ்த்தப்பட்டன. கத்தோலிக்க திருமறையும் திருப்பலிகளும் தடை செய்யப்பட்டிருந்த அக்காலத்தில், கத்தோலிக்க குருக்களுக்கு அடைக்கலம் தருவது தண்டனைக்குரிய குற்றமாகும். இங்கிலாந்தின் வடக்கில் தப்பியோடிய குருமார்களின் மிக முக்கியமான மறைவிடங்களில் அவரின் வீடும் ஒன்று ஆனது.

மார்கரெட், தமது மூத்த மகனான ஹென்றியை (Henry) ஃபிரான்ஸ் நாட்டின் “கிராண்ட் எஸ்ட்” (Grand Est region) மாகாணத்தின் “ரெய்ம்ஸ்” (Reims) எனும் நகரிலிருந்த ஆங்கிலேய கல்லூரியில் (English College) குருத்துவ கல்வி கற்க அனுப்பினார். அவரது மூத்த மகன் வெளிநாட்டிற்கு ஏன் போனார் என்பதை விளக்குமாறு, மார்கரெட்டின் கணவர் அதிகாரிகளால விசாரிக்கப்பட்டார். 1586ம் ஆண்டு, மார்ச் மாதம், க்ளித்ரோவ் வீடு சோதனையிடப்பட்டது. விசாரணையில், பயம் கொண்ட சிறுவன் ஒருவன், குருக்களின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுத்தான்.

மார்கரெட் உடனடியாக கைது செய்யப்பட்டார். ரோமன் கத்தோலிக்க குருக்கள் தங்க மறைவிடங்களை ஏற்பாடு செய்து தந்த குற்றத்துக்காக “அஸ்ஸிசெஸ்” (Assizes) நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டார். மார்கரெட் வழக்காட மறுத்தார். இதன்காரணமாக, அவரது குழந்தைகளை விசாரிக்கவும், குற்றம் சாட்டவும், துன்புறுத்தவும் இயலாமல் போனது. தமது நான்காவது குழந்தையை கருத்தரித்திருந்த மார்கரெட், 1586ம் ஆண்டு, “லேடி டே” (Lady Day) என்றழைக்கப்படும் அன்னை மரியாள் தினத்தன்று, கொல்லப்பட்டார். அன்றைய தினம், அந்த வருடத்தின் பெரிய வெள்ளிக் கிழமையுமாகும்.

Comments are closed.