எருசலேம் புனித நகரின் கிறிஸ்தவப் பண்பு காக்கப்படுமாறு

எருசலேம் கிறிஸ்தவர்கள், அப்புனித நகரைவிட்டு வெளியேறாமல், அந்நகரில் தங்களின் இருப்பை வலுப்படுத்தி, அந்நகரின் கிறிஸ்தவப் பண்பைக் காக்குமாறு, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை அலுவலகத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா (Pierbattista Pizzaballa) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை பங்கு மக்களுக்கென, பேராயர் பிட்சபாலா அவர்கள் வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில், எருசலேம் பங்குத்தளம், எருசலேம் மறைமாவட்டத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்டது என்றும், எருசலேமில்  கிறிஸ்தவர்களின் இருப்பு இன்றி, அந்நகரின் தனித்துவம் முழுமையடையாது என்றும் கூறியுள்ளார்.

எருசலேமில் பல புனித இடங்கள் இருந்தாலும், ஏராளமான திருப்பயணிகள் அங்கு வந்தாலும், உள்ளூர் கிறிஸ்தவர்களின் பிரசன்னம் இன்றி, எருசலேம் தலத்திருஅவை உயிரூட்டமுள்ளதாய் அமையாது என்றும், பேராயரின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அண்மை ஆண்டுகளில் எருசலேம் நகரம், பல்வேறு சமூக மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதையும், விரிவாக்கப்பட்டுள்ள நகரில் வாழும் மக்கள், ஆலயங்களுக்குத் தொலைவில் வாழ்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ள பேராயர் பிட்சபாலா அவர்கள், புனித நகரில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள், கிறிஸ்தவர்களின் பிரசன்னத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது என்று கூறியுள்ளார்.

வத்திக்கான்

Comments are closed.