திருஅவையின் வாழ்வில், பொதுநிலையினர் முன்னிலை வகிக்கின்றனர்”

திருத்தந்தையின் மே மாத செபக்கருத்து – பொதுநிலையினர் மறைப்பணி

மே.03,2018. பொதுநிலையினரின் மறைப்பணி என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதத்தின் செபக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இக்கருத்தையொட்டி, திருத்தந்தை வழங்கியுள்ள எண்ணங்களைத் தொகுத்து, ‘The Pope Video’ என்ற காணொளி, மே 3, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

“திருஅவையின் வாழ்வில், பொதுநிலையினர் முன்னிலை வகிக்கின்றனர்” என்ற சொற்களுடன், திருத்தந்தை, இக்காணொளியில், தன் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

நற்செய்தியின் உண்மைக்கு, தங்கள் விசுவாச வாழ்வால் பொதுநிலையினர் வழங்கும் சாட்சி நமக்குத் தேவை என்று கூறும் திருத்தந்தை, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, நம்பிக்கையுடன், அச்சமின்றி இவர்கள் ஆற்றும் பணிகளுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்று விண்ணப்பித்துள்ளார்.

திருமுழுக்கின் வழியே பெற்றுள்ள மறைப்பணியை, பொதுநிலையினர் நிறைவேற்றவும், இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதில், படைப்பாற்றலைப் பயன்படுத்தவும் அவர்களுக்காக செபிப்போம் என்று திருத்தந்தை இம்மாத செபக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை வழங்கும் செபக்கருத்துக்களை வெளியிட்டுவரும் இயேசு சபை அமைப்பான, ‘செப திருத்தூதுப்பணி’ என்ற குழுவைச் சார்ந்தவர்கள், மே மாதத்திற்கென வெளியிட்டுள்ள காணொளித் தொகுப்பில், இயற்கையைப் பாதுகாத்தல், மாற்றுத்திறனாளிகளுக்குப் பணியாற்றுதல் போன்ற சூழல்களில், பொதுநிலையினர் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் சிறு காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Comments are closed.