மறையுரைச் சிந்தனை (மே 02)

“நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள்”

அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் அதிபராக இருந்த சமயம், உள்நாட்டுப் போர் பயங்கரமாக நடந்தது. இப்படிப்பட்ட பிரச்சனையால் ஆபிரகாம் லிங்கன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார், எனவே அவரைச் சந்தித்து, அவரிடத்தில் ஆறுதலாக ஏதாவது பேசிவிட்டு வரலாம் என நினைத்துக்கொண்டு அவருடைய நெருங்கிய நண்பர் அவரைச் சந்திக்க வந்தார்.

வந்தவர் ஆபிரகாம் லிங்கனிடம், “லிங்கன்! எதைப் பற்றியும் கவலை கொள்ளவேண்டும். ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்” என்றார். அதற்கு ஆபிரகாம் லிங்கன் மிகவும் பொறுமையாக அவரிடம், “ நண்பா! ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியும், ஆனால், நாம் ஆண்டவரோடு இருக்கின்றோமா? என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது” என்றார். லின்கன் இவ்வாறு பேசியதற்கு அவருடைய நண்பரால் எதுவும் பேச முடியவில்லை.

அமெரிக்க அதிபர் லிங்கனுக்கும் அவருடைய நண்பருக்கும் இடையே நடந்த உரையாடலிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய உண்மை யாதெனில், “ஆண்டவராகிய கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார், ஆனால் நாம் அவரோடு இருக்கின்றோமா?” என்பதுதான் சிந்தித்துப் பார்க்கவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல, நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்” என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளில் உள்ள உண்மை என்ன என்பதை இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம். ஆண்டவராகிய இயேசு நம்மோடு எப்போதும் இணைந்திருக்கின்றார். இறைவார்த்தையின் வழியாகவும், நற்கருணை வழியாகவும், இன்னும் பல்வேறு காரியங்களின் வழியாகவும் இயேசு தன்னுடைய அருள் பிரசன்னத்தை எப்போதும் நமக்கு வெளிபடுத்தி, நம்மோடு இணைந்திருக்கின்றார். ஆனால் நாம் அவரோடு இணைந்திருக்கின்றோமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இஸ்ரேயல் மக்களோடு ஆண்டவராகிய கடவுள் எப்போதும் உடனிருந்தது போன்று, இயேசுவும் நம்மோடு இணைந்திருக்கின்றார். ஆனால், நாம்தான் இஸ்ரயேல் மக்களைப் போன்று இயேசுவின் அன்பைப் புறக்கணித்துவிட்டு, அவருக்கும் நமக்கும் உள்ள உறவைத் துண்டித்துவிட்டு திக்கற்றவர்களாய் அலைந்துகொண்டிருக்கின்றோம்.

நம்மோடு இணைந்திருக்கின்ற இயேசுவோடு நாம் எப்போதும் இணைந்திருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இயேசுவோடு இணைந்திருப்பதால் எத்தகைய ஆசிரை நாம் பெற்றுக்கொள்கின்றோம்/ பெற்றுக்கொள்வோம் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசுவோடு இணைந்திருப்பதால் நாம் பெறக்கூடிய முதன்மையான ஆசிர்வாதம், நாம் மிகுந்த கனிதருபவர்கள் ஆவோம் என்பதாகும். நற்செய்தியில் இயேசு கூறுகின்றார், “ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனிதருவார்” என்று. இது உண்மை. எப்போது நாம் இயேசுவோடு இணைந்திருக்கின்றோமா? அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ந்திருக்கின்றோமா? அப்போது நாம் மிகுந்த கனி தருவோம் என்பது உண்மை. அதே நேரத்தில் இயேசுவோடு நமக்குள்ள உறவை நாம் துண்டித்துவிட்டு தனியாக இருக்கின்றபோது நம்மால் கனி எதுவும் தரமுடியாது, நிம்மதியாகவும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

இந்த இடத்தில் ‘Haunt Of Heaven’ என்ற ஆங்கிலக் கவிதையை எழுதிய பிரான்சிஸ் தோம்ப்சன் (Francis Thompson) என்ற கவிஞரைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது. அவர் ஒரு காலத்தில் குடிகாரராக, தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் ஆண்டவர் இயேசுவின் அன்பினால் தொடப்பட்டு, அவரோடு இணைந்து வாழத் தொடங்கினார். அப்போது அவர் எழுதிய கவிதைதான் மேலே சொல்லப்பட்ட கவிதை. இக்கவிதையை எழுதிய பிறகு அவர் உலக பிரபலம் ஆனார். ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருப்பதால் எத்தகைய ஆசிர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்கின்றோம் என்பதற்கு ஆங்கிலக் கவிஞர் பிரான்சிஸ் தோம்ப்சன் அவர்களுடைய வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

அடுத்ததாக இயேசுவோடு இணைந்திருப்பதால் நாம் பெறக்கூடிய இரண்டாவது ஆசிர்வாதம் அல்லது நன்மை நாம் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என்பதாகும். இது ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருப்பதால் நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய ஆசிர்வாதம் என்றே சொல்லலாம். ஏனெனில், இயேசு கிறிஸ்து தந்தைக் கடவுளின் வலப்பக்கம் அமர்ந்துகொண்டு நமக்காக எப்போதும் பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்டவரோடு நாம் இணைந்திருக்கின்றபோது நாம் விரும்பியது அனைத்தும் நிறைவேறும் என்பதுதான் உண்மை.

ஆகவே, நம்முடைய வாழ்வை கனிதரக் கூடியதாகும், விரும்பிக் கேட்பதை நிறைவேற்றித் தரும் இயேசுவோடு இணைந்திருப்போம். எப்படி கிளைகள் கொடியோடு இணைந்திருக்கின்றதோ? அது போன்று நாமும் இயேசுவோடு இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.