அமைதிக்காக உழைத்து, அக்கறையுடன் செயல்படுங்கள்

செபத்தின் முக்கியத்துவத்தையும், ஏழைகள் மீது காட்டப்படவேண்டிய அக்கறையையும் வலியுறுத்துகிறது, திருத்தந்தையின் திங்கள் தின டுவிட்டர் செய்தி.

“நீங்கள் செபிக்கும்போது, இயேசுவோடு ஒன்றித்திருங்கள், அதேவேளை, அமைதிக்காக உழைப்பதுடன், ஏழை எளியோருடன் அக்கறையுள்ளவர்களாக செயல்படுங்கள்” என இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை  பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘நமக்கு உண்மையிலேயே அமைதி வேண்டுமா? அப்படியெனில் அனைத்து ஆயுதங்களையும் தடை செய்வோம். அவ்வாறு செய்யும்போது, நாம் போரின் அச்சத்தில் வாழ தேவையில்லை’ என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 29, இஞ்ஞாயிறன்று, வேதியல் போரினால் துன்புறுவோரை நினைவுகூரும் உலக நாள் கடைபிடிக்கப்படுவதையும், இரு கொரிய நாடுகளுக்கிடையே அண்மையில் நிகழ்ந்த நம்பிக்கை தரும் சந்திப்பையும் நினைவுறுத்தும் வண்ணம், திருத்தந்தையின் ஞாயிறு டுவிட்டர் செய்தி வெளியானது.

ஆதாரம் :  வத்திக்கான்

Comments are closed.