பாலியல் துன்பங்களை அனுபவித்தவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை

சிலே நாட்டில், அருள்பணியாளர்களால், பாலியல் முறையில் துன்பங்களை அனுபவித்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், ஏப்ரல் 27, இவ்வெள்ளிக்கிழமை மாலையில் சந்தித்தார் என்று, திருப்பீட செய்தித் துறையின் தலைவர், Greg Burke அவர்கள் அறிவித்தார்.

திருத்தந்தையின் விருப்பத்தின்பேரில், இச்சந்திப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படமாட்டாது என்றும், Greg Burke அவர்கள், இஸ்பானிய மொழியில் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

அருள்பணியாளர்களால், பாலியல் முறையில் துன்பங்களை அனுபவித்தவர்கள் சொல்வதைக் கேட்பதற்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களிடம் திருத்தந்தை மன்னிப்பு கேட்டார் என்றும், இச்சந்திப்புகளின் இரகசியம் மதிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை விரும்புகிறார் என்றும், Greg Burke அவர்களின் அறிக்கை கூறுகின்றது.

துன்புறுவோருக்கு நம்பிக்கையையும், அவர்கள் வாழ்வைச் சரிசெய்யும் சூழலையும் திருத்தந்தை உருவாக்குகின்றார் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் பேச முடியுமோ அவ்வளவு நேரத்தை திருத்தந்தை ஒதுக்கினார் என்றும், இந்தச் சந்திப்புக்களுக்கு குறிப்பிட்ட நேரமோ, குறிப்பிட்ட தலைப்போ எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், Greg Burke அவர்களின் அறிக்கை மேலும் கூறுகின்றது.

திருஅவை முழுவதிலும், குறிப்பாக, சிலே தலத்திருஅவையில், அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறுகள் நிகழ்வதை, குறிப்பாக, பாலியல் முறைகேடுகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு இந்த சந்திப்பு வழிவகுக்கும் என்று திருத்தந்தை நம்புவதாக, Burke அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

வத்திக்கான்

Comments are closed.