பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு (ஏப்ரல் 29)

இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம்!

டைட்டானிக் கப்பலைக் குறித்துச் சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி. அந்தக் கப்பலை வடிவமைத்த பொறியாளர்கள் ‘டைட்டானிக் கப்பலுக்கு இணையான கப்பல் இந்த உலகத்தில் எங்கும் கிடையாது, இதனை இயேசு கிறிஸ்து நினைத்தாலும்கூட மூழ்கடிக்க முடியாது’ என்ற ஒருவிதமான ஆணவத்தில் வடிவமைத்தார்கள். அதனால் அதன் பக்கவாட்டில் ‘NOT EVEN CHRIST COULD MAKE IT SINK, NO GOD, NO POPE, NEITHER EARTH NOR HEAVEN CAN SWALLOW HER UP’ என்று எழுதி வைத்தார்கள்.

இதனைப் பார்த்த அந்தக் கப்பலில் பணியாற்றிய ஒருசில இறை நம்பிக்கையாளர்கள், “இப்படியெல்லாம் தயவு செய்து எழுதவேண்டாம், இறைவனுக்கு முன்பாக நாமெல்லாம் ஒன்றுமில்லை” என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். அவர்களோ, அதையெல்லாம் கேட்காமல், “நாம் யாரென்று இந்த உலகத்திற்குக் காட்டுவோம், அதனால் எழுதியது எழுதியதாகவே இருக்கட்டும்” என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள்.

குறிப்பட்ட நாளில் டைட்டானிக் கப்பல் கடலில் பயணமானது. தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் உலகத்தில் இருக்கும் மிகப்பிரமாண்டமான கப்பலில் பயணிக்கின்றோம் என்ற ஒருவிதமான மமதையோடு பயணம் செய்தார்கள். திடிரென்று கப்பல் பனிப்பாறையின் மீது மோதி மூழ்கத் தொடங்கியது. கப்பல் பனிப்பாறையில் மோதிய பகுதியில்தான் ‘NO GOD NO POPE’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆம், ‘கடவுளே வேண்டாம், ஏன் கடவுளைவிட நாங்கள் பெரியவர்கள் என்ற ஆணவத்தோடு செயல்பட்டதால், உலகத்திலே மிகப்பெரிய சொகுசுக் கப்பல் என்று மார்தட்டுக்கொண்டு பயணப்பட்ட டைட்டானிக் கப்பல், கடைசியில் பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டது.

‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்று சொல்வார்கள். ஆம், ஆண்டவரின் துனையின்று நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘இணைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம் என்னும் சிந்தனையைத் தருகின்றது. நாம் அதனைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து கூறுவார், “உண்மையான திராட்சைக் கொடி நானே… நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திரட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது”. ஆம். நாம் மிகுந்த கனிதரவேண்டும் என்றால் இறைவனோடு/ இயேசுவோடு இணைந்திருக்கவேண்டும். இறைவனோடு எந்தெந்த வழிகளில் இணைந்திருக்கலாம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவனோடு எப்போதும் இணைந்திருப்பதற்கான முதன்மையான வழி இறைவேண்டல் அல்லது ஜெபம் செய்வது ஆகும். ஆண்டவர் இயேசு சென்ற இடங்களில் எல்லாம் நன்மைகள் பலபுரிந்து, ஆண்டவருடைய வார்த்தையை மிகத் துணிச்சலோடு எடுத்துரைப்பதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தது அவர் அனுதினமும் செய்துவந்த ஜெபம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் நாள்முழுவதும் செய்துவந்த பல்வேறு பணிகளுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது அவர் செய்துவந்த ஜெபம்தான். ஆகையால், நாம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு எப்போதும் ஜெபம் செய்யக்கூடிய மக்களாக இருக்கவேண்டும்.

இறைவனோடு இணைந்திருப்பதற்கான இரண்டாவது வழி இறைவார்த்தையைக் கேட்டு நடப்பது ஆகும். யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கடவுளுடைய கட்டளையைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார்” என்கின்றார். இதுதான் உண்மை. யாராரெல்லாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்களோ/ வாழ்கின்றார்களோ அவர்களோடு கடவுள் இருந்தார்/ இருப்பார் என்று உண்மையிலும் உண்மை.

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தபோது அவர்களோடு கடவுள் இருந்தார். என்றைக்கு அவர்கள் கடவுளின் கட்டளையை மறந்து, அதாவது யாவே கடவுளை மறந்துவிட்டு பாகாலை வழிபடத் தொடங்கினார்களோ அன்றைக்கே கடவுள் அவர்களை விட்டுப் பிரிந்து போனார்(?), அதனால் அவர்கள் வேற்று நாட்டவரால் நாடுகடத்தப்பட்டார்கள். ஆகவே, இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு இருந்தபோது, கடவுள் அவர்களோடு இருந்தார் என்பதையும், அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து சென்றபோது, கடவுள் அவர்களை விட்டுப்போனார் என உறுதியாகச் சொல்லலாம்.

கடவுளோடு ஜெபத்தின் வழியாகவும், அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாகவும் அவரோடு இணைந்திருக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், கடவுளோடு இணைந்திருப்பதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். நற்செய்தியில் இயேசு கூறுவார், ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்” என்று. ஆம், நாம் கடவுளோடு இணைந்திருக்கின்றபோது நாம் மிகுந்த கனிதருவோம் என்பது ஆழமான உண்மை. நிறையப் புனிதர்கள், இறையடியார்கள் யாவரும் மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்ந்ததற்குக் காரணம் அவர்கள் கடவுளோடு இணைந்திருந்ததே என்று நாம் உறுதிபடச் சொல்லலாம்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும்போது நாம் ஜெபத்தின் வழியாகும், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பதன் வழியாகவும் இறைவனோடு இணைந்திருப்போம், அதன்வழியாக மிகுந்த கணிதருகின்றவர்களாவோம், இறையருளை நிறைவாய் பெறுவோம்

Comments are closed.