இறைவன் ஒருவரே உண்மையான மகிழ்வை வழங்கமுடியும்” – டுவிட்டர்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 26 வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இறைவன் ஒருவரே நமக்கு உண்மையான மகிழ்வை வழங்கமுடியும். செல்வம், இன்பம், அதிகாரம் என்ற பிற இடங்களில் மகிழ்வைத் தேடி, நேரத்தை வீணாக்குவது, பயனற்றது” என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
ஏப்ரல் 26, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.548 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 77 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 544 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 53 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
மேலும், நைஜீரியாவிலிருந்து ‘அத் லிமினா’ சந்திப்பிற்காக, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள 59 ஆயர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 26, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
Comments are closed.