ஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30

அக்காலத்தில் எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார்.

யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————-
மறையுரைச் சிந்தனை (ஏப்ரல் 24)

நல்லாயனின் நல்லாடுகள் ஆவோம்!

ஒரு நகரில் கல்வியாளர் ஒருவர் இருந்தார். அவர் எல்லோரிடமும் அநாகரீகமாகவும் அகம்பாகமாகவும் நடந்து வந்தார். அதனால் யாரும் அவரிடத்தில் நெருங்கிப் பழகுவதில்லை.

ஒரு விழாவில், அந்தக் கல்வியாளரைக் காட்டி அவருக்கு நெருக்கமான ஒருவர், “இவர் போல் நூலகத்தில் புத்தகங்களை அடுக்குபவர் யாரும் கிடையாது. இவர் மிகச் சிறந்த நூலகர்” என்றார். இது கல்வியாளரின் உள்ளத்தில் கர்வத்தை வளர்த்தது. அவரைப் பார்த்து இன்னொருவர், “இவர் நூலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்து என்ன பயன்? ஒரு நாளாவது அந்த நூல்களில் சொல்லியுள்ளபடி நடந்ததில்லையே” என்று குறைபட்டுக் கொண்டார். அதற்கு அந்தக் கல்வியாளருக்கு நெருக்கமானவர், “நான் இவர் நூல்களை அடுக்கி வைக்கிறார் என்றேனே தவிர படித்து வைத்திருக்கின்றார் எனச் சொல்லவில்லையே” என்றார்.

இதைக் கேட்டு அந்தக் கல்வியாளருக்கு பெருத்த அவமானமாய் போய்விட்டது. ஆமாம், பல நூல்களை வாங்கிக் குவித்தும், அந்த நூல்களில் சொல்லியுள்ளபடி நடக்கவில்லை என்றால் அதனால் என்ன பயன்?… அனுதினமும் இறைவார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்கவில்லை என்றால், அதனால் ஆகக்கூடிய பலன்தான் என்ன? இயேசுவின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கவில்லை என்னும்போது அதனால் ஒரு பயனும் ஆகாது, நாம் ஒருபோதும் இயேசுவின் சீடராக, அவருடைய மந்தையாக மாற முடியாது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தான் எப்படி நல்லாயனாக இருக்கிறேன் என்பதையும், தன் ஆடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

Comments are closed.