கிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் தூதர்களாக வாழ அழைப்பு

தென் இத்தாலியின், அலெஸ்ஸானோவில் இவ்வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேய்ப்புப்பணி நிகழ்வுகளை நிறைவு செய்து, அங்கிருந்து பாரி மாநிலத்தின் வட பகுதியிலுள்ள மொல்ஃபெத்தா சென்று, அந்நகரின் கடற்கரை வளாகத்தில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர் தொனினோ பெல்லோ அவர்கள், கடும் துன்பம், வேதனை மற்றும் தனிமையை அனுபவித்த மக்களுக்கு, நம்பிக்கை மற்றும் இரக்கத்தின் நற்செய்தியை எடுத்துச் சென்றதில், இயேசுவுக்கு உண்மையான சாட்சியாக விளங்குகிறார் என்று கூறினார். இந்நாளின் திருப்பலி வாசகங்களை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வுக்கு மிகவும் முக்கியமான, அப்பம் மற்றும் இறைவார்த்தை பற்றி விளக்கினார்.

அப்பம், வாழ்வதற்குத் தேவைப்படும் இன்றியமையாத உணவு என்றும், இயேசு, தம்மையே வாழ்வளிக்கும் அப்பமாக வழங்குவதை, இன்றைய நற்செய்தியில் கேட்டோம் என்றும் உரைத்த திருத்தந்தை, திருப்பலி, வெறும் அழகான சடங்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவரும் பிறருக்குத் தன்னையே வழங்குவதற்கு, ஆண்டவரால் ஊட்டப்படும் அன்பின் ஒன்றிப்பு என்று கூறினார்.

ஆயர் தொனினோ அவர்கள் கூறியதுபோன்று, நம் வாழ்வில் பிறரன்புப் பணிகள் மட்டும் போதாது என்றும், நாம் ஆற்றும் பணிகளில் பிறரன்பு குறைந்தால், அப்பணிகளில் அன்பு இல்லையென்றால், இந்தப் பிறரன்புப் பணிகளுக்குத் தொடக்கமாக அமைந்துள்ள திருப்பலி இல்லாவிடில், ஒவ்வொரு மேய்ப்புப்பணியும் வெறும் விளையாட்டாகவே இருக்கும் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

பிறருக்காக வாழ்வதே, கிறிஸ்தவர்களின் அடையாளச் சின்னமாகும் எனவும் கூறியத் திருத்தந்தை, திருப்பலிக்குப்பின் ஒருவர் தனக்காக வாழ்வதில்லை, பிறருக்காக வாழ்கின்றார் என, ஒவ்வோர் ஆலயத்துக்கு வெளியே ஒட்டப்படுவது குறித்தும் எச்சரித்தார்.

திருப்பலிக்குப் பின்னர், திருஅவையாக, ஒன்றிப்பின் மக்களாக, நாம் வாழ்கின்றோமா என்ற கேள்வியையும் எழுப்பிய திருத்தந்தை, வாழ்வின் அப்பம், அமைதியின் அப்பம் என்றும், பிறரோடு சேர்ந்து உணவு உண்பது, பிறரோடு சேர்ந்து உயிர்த்துடிப்புடன் வாழ்வது போன்றவற்றிலிருந்து அமைதி பிறக்கும் என்றும், மோதல்களும், போர்களும் மற்றவரை அறியாமல் இருப்பதிலிருந்து பிறக்கின்றன என்றும் கூறினார்

Comments are closed.