நற்செய்திக்கு வாழ்வால் விளக்கம் சொல்பவர்களாக மாறுவோம்

இறைத்தந்தை, கிறிஸ்து இயேசுவில் நமக்கு வெளிப்படுத்தியிருக்கின்ற நற்செய்தியை, ஒவ்வொருவரும் அவரவர் பாணியில், ஒவ்வொரு நாளும் சிறப்பாக விளக்கம் சொல்பவர்களாக மாற வேண்டும் என்ற தன் ஆவலை வெளிப்படுத்தினார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 09, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் தன்னை சந்தித்த, “திருஅவை, திருஇசை, பொருள் விளக்குபவர்கள்: ஓர் உரையாடல் அவசியம்” என்ற தலைப்பில், வத்திக்கானில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

இறைத்தந்தை, கிறிஸ்து இயேசுவில் நமக்கு வெளிப்படுத்தியிருக்கின்ற அழகை, மற்றும், அவரோடு நமக்குள்ள பிள்ளைக்குரிய உறவை வெளிப்படுத்தும் புகழ்பாடலை, நாளுக்கு நாள் நன்றாக பொருள் விளக்கம் சொல்பவர்களாக மாற வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

பொருள் விளக்குபவரை நாம் நினைக்கையில், அவர் ஒரு மொழி பெயர்ப்பாளராக, பிறர் புரிந்துகொள்ளும்முறையில் விளக்குபவராக இருப்பதைப் பார்க்கிறோம், இசையிலும், அதன் அழகையும், சிறந்த கலை அனுபவத்தையும் வெளிப்படுத்துவதற்கு, அதனை விளக்குபவர், அதனை இயற்றியவர் பற்றி தனது சொந்த பாணியில் விளக்குகிறார் என்று திருத்தந்தை கூறினார்.

உண்மையில், ஒவ்வொரு கிறிஸ்தவரும், தனது தனிப்பட்ட வாழ்வில், கடவுளைப் புகழ்வது மற்றும், நன்றிகூர்தலால், கடவுளின் திட்டத்தை விளக்குபவராக இருக்கிறார் என்றும், திருஅவையும், அந்தப் புகழ்பாடல் வழியாக, வரலாற்றில் மேற்கொள்ளும் பயணத்தில் நற்செய்தியை விளக்குகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்

திருஇசை பாப்பிறை நிறுவனம் மற்றும், புனித ஆன்செல்ம் பாப்பிறை திருவழிபாடு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், திருப்பீட கலாச்சார அவை, வத்திக்கானில் “திருஅவை, இசை, பொருள் விளக்குபவர்கள்: ஓர் உரையாடல் அவசியம்” என்ற தலைப்பில், வத்திக்கானில் மூன்றாவது பன்னாட்டு கருத்தரங்கை நடத்தியது.

Comments are closed.