உத்தரிக்கிற ஆண்மாக்கள் வணக்கம் மாதம்

ஆதலால், பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமாய் இருக்கின்றது)
(2 மக்கபே -12:46)

நவம்பர்-10

10-ம் நாள்

எண்ணிறந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுவதாகக் காண்பிக்கிற விளக்கமாவது

தியானம்

தினந்தினம் எண்பதினாயிரம் மனுஷர் சாகிறார்களென்று சாஸ்திரிகள் கணக்கேற்றி ஒப்பித்துக்கொண்டு வருகிறார்களாம். இந்த எண்பதினாயிரம் மனுஷருக்குள்ளே இருபத்தையாயிரம் பேர்கள் மெய்யான சத்திய வேதக் கிறிஸ்துவர்களாயிருக்கிறார்களென்று உத்தேசித்துச் சொல்லலாம். இந்த எண்ணிக்கையின்படியே பத்து நாளுக்குள்ளாக இரண்டு இலட்சத்து ஐம்பதனாயிரம் பேர்கள் செத்திருப்பார்களே. ஒருமாதங் கணக்குப்பார்த்தால் ஏழுலட்சத்து ஐம்பதனாயிரம் பேர்கள் மடிந்திருப்பார்களே! ஒருவருஷத்துக்குள்ளே தொண்ணுாறு லட்சங்கணக்காகும். பத்து வருஷத்துக்குப் பிற்பாடு ஏறக்குறைய ஒன்பது கோடி கிறிஸ்துவர்கள் செத்திருப்பார்களே. இந்தக் கணக்கதிகமாய்ப் பெருக்காமல் ஒரு நாளிலே சாகிற இருபத்தையாயிரம் கிறிஸ்துவருக்குள்ளே எத்தனை ஆத்துமாக்கள் நேரே மோட்சத்துக்குப் போகப் பிராப்தியாயிருப்பார்களென்று நினைக்கிறீர்கள். மிகவுங் கொஞ்சம் பேர்கள் முற்றும் பரிசுத்தராயிருந்து அப்படி தாமதமில்லாமல் மோட்சத்தை அடைவார்களென்று சொல்லத்தக்கதாயிருக்கிறது.

அதெப்படியென்றால் முன் தியானங்களிலே காண்பித்தாற் போல சாகிறவர்களெல்லோரும் ஏறக்குறைய அநேகர் சொற்பப் பாவங்களோடும், மன்னிக்கப்பட்ட சாவான பாவங்களுக்குச் செலுத்தவேண்டிய அபராதக் கடனோடும் திரிக்கிறார்களல்லவோ? அதல்லாமலும் ஒவ்வொருவன் செத்தப்பிற்பாடு வெகு நாள் வெகு வருஷ காலம்
உத்தரிக்கவேண்டியதென்று முன்னே சொல்லிவிட்டோமே. இதிலும் செத்தவர்களுக்கு ஆறுதலையும் உதவியையும் வருவிக்கப் பிரயாசைப்படுகிறவர்கள் மிகவுங் கொஞ்சம் பேர்கள்தான். இதிப்படியிருக்க நாளொன்றுக்கு இருபத்தையாயிரம் கிறிஸ்துவர்கள் சாகிறபோது, எத்தனை லட்சம், எத்தனை கோடி ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் கொடிய வேதனைகளில் உபாதிக்கப்படுவார் களென்று நினைத்துப் பாருங்கள்.

பேர்பெற்ற மேற்றிராணியாரான அர்ச் அமிர்த நாதர், புண்ணியவான்கள் முதலாய்த் தேவ ஊழியத்தில் அசட்டையும், தவக்கிரியைகளில் சோம்பலும், தர்மஞ் செய்வதில் கஞ் சத்தனமுமாயிருக்கிறதை கண்டு மோட்சத்துக்கு நியமிக்கப்பட்டவர்களெல்லோரும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு வழியாகத்தான் ஈடேறுவார்களென்றார். அர்ச் வித்தாலியானம் மாளும், கணக்கில்லாத அற்புதங்களைப் பண்ணின அர்ச் செவேரியானுசென் கிறவரும், அர்ச்சியசிஷ்ட பட்டம் பெற்ற அநேக புண்ணிய ஆத்துமாக்களும் உத்தரிக்கிற
ஸ்தலத்தில் வேதனைப்பட்டபின்னரே மோட்சத்துக்கு போனதாக அறிந்திருக்கிறோம். ஒர் அர்ச்சியசிஷ்டவர் தான் கண்ட காட்சியினால் ஒரு நாளிலே செத்தவர்களுக்குள்ளே ஒருத்தன்மாத்திரம் நேரே மோட்சத்துக்குப் போனானென்றும், வேறு இரண்டு ஆத்துமாக்கள் கொஞ்சநேரமட்டும் உத்தரிக்கிறஸ்தலத் திலிருந்து ஈடேறினார்களென்றும் வசனித்தார். அப்படியிருக்கையில் எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்பட்டுக் கிடக்கிறார்களென்பது விளங்கும் சத்தியந்தானல்லவா?

கிறிஸ்துவர்களுக்குள்ளே திரளான பேர்கள் நரகத்தில் தள்ளப்படுகிறதாகச் சில சாஸ்திரிகள் நிச்சயித்தாலும், எந்தப் பாவியையுங்குறித்து அவன் கெட்டானென்று நிச்சயமாகச் சொல்லக் கூடாது .
எதனாலேயென்றால் அநேகர் பாவசங்கிர்த்தனமில்லாமல் திடீரென மரித்து அவலமாய் செத்தார்களென்று காணப்பட்டாலும், சர்வேசுரனுடைய
மட்டற்ற கிருபையினாலே ஆத்துமம் பிரியுஞ் சமயத்தில் ஒருவேளை தங்களுடைய பாவங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபப்பட்டு நரகத்துக்குத் தப்பினார்களென்று நினைக்கத்தக்கதாயிருக்கிறது. மீண்டும் சர்வேசுரனுடைய மட்டுக்கடந்த கிருபையைப் பாராட்டி அர்ச். லிகோரியூஸ். அர்ச். லேயோநார்துஸ், சாஸ்திரிகளுக்குள்ளே பெரிய சாஸ்திரியான சுவாரேசியூஸ் முதலான பேர்பெற்ற சாஸ்திரிகள் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் மிகுதியான பேர்கள் நித்திய நரகத்துக்குத் தப்பி உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வேதனைப்பட்டாவது ஈடேறுவார்களென்று சொல்லுகிறார்கள்.

இப்பேர்ப்பட்ட அர்சிஷ்டவர்களும் சாஸ்திரிகளும் சொல்லும் இந்தச் சத்தியம் யாவருது ஆறுதலாயிருந்தாலும், அதனால் தேவ ஊழியத்தில் அசட்டையாயிருக்கக்கூடாது. பாவவழியிலே மூர்க்கமாய் நடக்கக் கூடாது . ஏனென்றால் , அப்படி நடப்பீர்களேயானால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அகோர வேதனைகளைச் சம்பாதித்துக்கொள்வீர்களல்லாமல் நித்திய நரகத்துக்குப்போகிற மகா ஆபத்திலிருப்பீர்களென்பதற்கும் சந்தேகமில்லை.
இதுவுமல்லாமல் பதிதரும் பிரிவினைக்காரரும் எல்லோரும் ஒருங்குடன் நரகத்துக்குப் போகிறார்களென்று சொல்லக்கூடுமோ? அதுவும் சொல்லக்கூடாது. ஏனெனில், அவர்களில் அநேகர் மெய்யான இரட்சகரான சேசுகிறிஸ்துநாதரை விசுவசித்து நம்பி ஞானஸ்நானம் பெற்றுக் கூடின மட்டும் பாவங்களை விலக்கி செய்த பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட்டுத் தாங்களிருக்கிற மார்க்கம் துர்மார்க்கமென்று அறியாமல் செத்தால் அவர்கள் ஈடேறுவார்கள் என்பது சத்திய விசுவாசமாம்.

ஆயினும் அப்படி உத்தமமனஸ்தாபத்தோடு சாகிற பதிதர் திரளான பேர்களோ கொஞ்சம்பேர்களோ என்று சர்வேசுரனுக்கு மாத்திரம் தான் தெரியும். அது எப்படி இருந்தாலும் அவர்களில் ஈடேறிப்போகிறவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மகாவேதனைப்படுவார்களென்பது யாவரும் எளிதில் உணரக் கூடியதாகும்.

Comments are closed.