கத்தோலிக்கத் திருஅவையின் புள்ளிவிவரங்கள் 2019

2017ம் ஆண்டில் உலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை 131,32,78,000. இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டைவிட, 1,42,19,000 அதிகம்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிறப்பு மறைபரப்பு மாதத்தில், அக்டோபர் 20, இஞ்ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு சிறப்பிக்கப்படுவதையொட்டி, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் புள்ளிவிவரங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது, திருப்பீடத்தின் பீதேஸ் செய்தி நிறுவனம்.

2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையுள்ள புள்ளி விவரங்களின்படி, திருஅவையின் உறுப்பினர்கள், திருஅவை அமைப்புகள், நலவாழ்வு மற்றும், கல்வி பணிகள் பல்வேறு விவரங்களை, திருஅவையின் புள்ளிவிவர நூலிலிருந்து வெளியிட்டுள்ளது பிதேஸ் நிறுவனம்.

உலக மக்கள் தொகை, 2017ம் ஆண்டில் 740 கோடியே 83 இலட்சத்து 74 ஆயிரமாக இருந்தது எனவும், இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டைவிட, 5 கோடியே 6 இலட்சத்து 85 ஆயிரம் அதிகம் என்றும், 2017ம் ஆண்டில் உலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை 131 கோடியே 32 இலட்சத்து 78 ஆயிரமாக இருந்தது எனவும், இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டைவிட, 1 கோடியே 42 இலட்சத்து 19 ஆயிரம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் ஆசியாவில் இரண்டு திருஅவை ஆட்சிப்பீடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன, அதேநேரம், அமெரிக்காவில் ஒன்று குறைக்கப்பட்டதால், அவ்வெண்ணிக்கை 2016ம் ஆண்டை விட ஒன்று அதிகரித்து, அதற்கு அடுத்த ஆண்டில் 3017 ஆக இருந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில், 5,389 ஆயர்கள் மற்றும், 4,14,582 அருள்பணியாளர்கள் இருந்தனர் என்று கூறும் அந்நிறுவனம், 71,305 பாலர் பள்ளிகள், 1,01,527 ஆரம்ப பள்ளிகள், மற்றும், 48,560 நடுத்தர பள்ளிகள் இருந்தன என்றும் கூறியுள்ளது.

5,269 மருத்துவமனைகள், 16,068 மருந்தகங்கள், 646 தொழுநோயாளர் பராமரிப்பு மையங்கள், 15,735 முதியோர் பராமரிப்பு இல்லங்கள், 9,813 கருணை இல்லங்கள் போன்ற கத்தோலிக்கத் திருஅவை நடத்தும் நலவாழ்வு மையங்கள் பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், 1919ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வெளியிட்ட “Maximum illud” என்ற திருத்தூது மடலின் நூறாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், சிறப்பு மறைபரப்பு மாதமாகக் கொண்டாடப்படுமாறு அறிவித்தார்

Comments are closed.