இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட ஓசேயா நூலில்,
“உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.” என கூறப்பட்டுள்ளது.
இறைவன் விரும்பும் இரக்கத்தை நாம் எப்பொழுதும் மனதில் கொண்டு, வாழ்வில் அவற்றை பிறரன்பு செயல்களாக மாற்றிட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
“கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை.” என தி.பா.51:17-ல், திருப்பாடல் ஆசிரியர் கூறியதை இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடலில் காண்கிறோம்.
இந்த தவக்காலத்தில் நமது பாவங்களுக்காக நொறுங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தோடு நாம் ஆண்டவரிடத்தில் செல்ல இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
“தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” என நமதாண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறுகிறார்.
ஆண்டவர் புறத்தைவிட அகத்தை அதிகம் கண்ணுற்றுப் பார்க்கிறார். நாம், அகத்திலும், புறத்திலும் என்றும் தாழ்ச்சியுடன் இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நான்காம் நூற்றாண்டில் திருத்தந்தையால், மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்ட இன்றைய புனிதர் புனித சிரிலை திருச்சபைக்கு தந்த நமது இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.