தவக் காலத்தின் நான்காம் ஞாயிறு (19.03.2023)

பார்வையளிக்கும் ஆண்டவர்
படைவீரன் பார்வை பெறுதல்
பாரம்பரமாகச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது.
கள்வர்கள் நடுவில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் உடலில் உயிர் இருக்கின்றதா? என்பதை அறிய விரும்பிய படைவீரன் அவரது விலாவில் ஈட்டியால் குத்தினான். இந்தப் படைவீரனின் வலக்கண் பார்வையற்றிருந்தது. இவன் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியதும், அதிலிருந்து வழிந்த செந்நீர் இவனது பார்வையற்ற வலக்கண்ணில் பட்டதும், அது பார்வை பெற்றது.
உடனே படைவீரன், “இயேசுவே என் மீட்பராகிய கடவுள்” என நம்பி அவரை ஏற்றுக்கொண்டான்.
ஆம், வலக் கண்ணில் பார்வையின்றி இருந்த படைவீரன் பார்வை பெற்றது இயேசு பார்வையளிக்கின்றார் என்பதையும், அவன் இயேசுவை நம்பி ஏற்றுக் கொண்டது, நாம் ஒவ்வொருவரும் இயேசுவை இறைமகன் என நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை நமக்குத் தருகின்றது. தவக் காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ஆண்டவர் இயேசு நமக்குப் பார்வை அளிக்கின்றார் என்பதையும், அதனால் நாம் அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
இயேசுவை நம்ப வேண்டும்
ஒருவர் உடல் நலக் குறைபாட்டுடன் பிறந்துவிட்டாலோ; அல்லது ஆபத்திலோ, விபத்திலோ சிக்கி இறந்துவிட்டாலோ, மக்கள், “அவன் பாவம் செய்திருக்க வேண்டும்; அதனால்தான் அவனுக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கின்றது” என்று பேசத் தொடங்கிவிடுவார்கள். இத்தகைய வழக்கம் நேற்று, இன்று இல்லை; இயேசுவின் காலத்திலும்; ஏன் அதற்கு முன்பும் இருந்தது.
நற்செய்தியில், பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவரைப் பார்த்து, இயேசுவின் சீடர்கள், “இரபி, இவர் பார்வைற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்கிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்” என்று சொல்லி, இயேசு அவருக்குப் பார்வை அளிக்கின்றார்.
இயேசு பிறவிலேயே பார்வையற்றிருந்த மனிதருக்குப் பார்வையளித்ததோ ஓர் ஓய்வுநாள். இதனால் பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும், ஓய்வுநாளில் பார்வையளிக்கும் ஒருவர் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது என்று இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுகின்றார்கள். மட்டுமல்லாமல், பார்வையற்ற மனிதரைத் துன்புறுத்தவும் தொடங்குகின்றார்கள். பரிசேயர்கள் இவ்வாறு நடந்துகொண்டாலும், பார்வை பெற்ற மனிதர் இயேசு கடவுளிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று அவரை நம்பி ஏற்றுக்கொள்கின்றார்.
யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இயேசு செய்யும் ஒவ்வோர் அருஞ்செயலும் ஓர் உண்மையை நமக்கு வெளிப்படுத்தும், இயேசு பிறவிலேயே பார்வையற்றிருந்த மனிதருக்குப் பார்வையளித்த நிகழ்வு, இயேசுவே உலகின் ஒளி (யோவா 8:12) என்கிற ஆழமான உண்மையை நமக்கு எடுத்துரைக்கின்றது. இயேசு உலகின் ஒளி; அவர் நமக்கு புறப்பார்வையை மட்டுமல்லாமல், அகப் பார்வையையும் தருகின்றார் என்பதால், அவர்மீது, பார்வை பெற்ற மனிதரைப் போன்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அகப் பார்வை பெற வேண்டும்
கடவுள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக நமக்கு புறப் பார்வையை மட்டுமல்லாமல், அகப் பார்வையும் தந்திருக்கின்றார் எனில், அதைக் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கான பதிலை இன்றைய முதல் வாசகம் தாங்கி வருகின்றது.
இஸ்ரயேலின் முதல் அரசனாகத் திருப்பொழிவு செய்யப்பட்ட சவுல், கடவுளின் கட்டளையைக் கடைப்பிடியாமல் தன் விருப்பம் போன்று செயல்பட்டான். இதனால் அவனை அரியணையிலிருந்து தூக்கி எறிந்த கடவுள், அவனுடைய இடத்தில் பெத்லகேமைச் சார்ந்த ஈசாவின் புதல்வர்களில் ஒருவனைத் திருப்பொழிவு செய்யுமாறு சாமுவேலிடம் சொல்கின்றார். சாமுவேலும் கடவுள் சொன்னவாறு, கொம்பினை எண்ணெயால் நிரம்பிக் கொண்டு, பெத்லகேமில் உள்ள ஈசாவிடம் வருகின்றார். அவர்களுடைய மகன்களுள் எலியாவைவைப் பார்த்ததும், “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று சாமுவேல் எண்ணும்போது, கடவுள் அவரிடம், “அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்கிறார். இதன்பிறகு சாமுவேல் ஈசாவின் ஏழு புதல்வர்களையும் தவிர்த்து, எட்டாவது புதல்வனான தாவீதைத் திருப்பொழிவு செய்கின்றார்.
ஆண்டவர் சாமுவேலிடம், தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே எனச் சொல்கின்ற வார்த்தைகள், எவரையும் வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பிடாதே என்ற கருத்தினை ஆழமாக வலியுறுத்திக் கூறுகின்றது. ஒருவரின் வெளித் தோற்றத்தைப் பார்த்து அவரைத் தீர்ப்பிடக் கூடாது எனில், அவரது உட்புறத்தைப் பார்த்துத் தீர்ப்பிட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஏனெனில், உட்புறத்தைக் கடவுளால் மட்டுமே பார்க்க முடியும் (திபா 139). அதனால் கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பிடும் அதிகாரம் உண்டு. நாம் யாரையும் எக்காரணத்தையும் கொண்டு தீர்ப்பிடத் தகுதியில்லாதவர்கள் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

Comments are closed.