இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் 42:1-ல், “கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
இறைவனுக்காக ஏங்கித் தவிக்கும் நமது உள்ளம் தூய்மையுள்ளதாக இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி வாசகத்தில் எலியாவும், எலிசாவும் பிற இனத்தார்கள் நடுவில் பணிசெய்ததைப் போன்று தன்னுடைய இறைப்பணியும் இருக்கும் என்று இயேசு கூறியதால்தான் தொழுகைக் கூடத்திலிருந்தவர்கள் இயேசுவின்மீது சீற்றம் கொள்கின்றார்கள். மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோதும், இயேசு யூதருக்கு மட்டுமல்லாது, புறவினத்தாருக்கும் பணிசெய்தார்.
குறுகிய மனப்பான்மையோடு இல்லாது இயேசுவைப் போல நாம் பரந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்று துவங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் அனைத்து மாணவ மாணவியரும் நல்ல முறையில் எழுதி தேர்வினில் வெற்றி பெற இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இத்தவக் காலத்தில் பசியுற்றோரைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு உணவளித்தல், எளியோருக்கு எல்லாவகையிலும் ஆதரவு அளித்தல் போன்ற பிறரன்பு செயல்களில் நாம் ஆர்வமுடன் ஈடுபட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.