வாழ்வுதரும்வார்த்தை (மார்ச் 14)

தவக் காலத்தின் மூன்றாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I தானியேல் (இ) 1: 2, 11-19
திருப்பாடல் 25: 4-5ab, 6-7bc, 8-9 (6a)
II மத்தேயு 18: 21-35
மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்
நிபந்தனை இல்லாமல் மன்னிப்போம்!
யூத இரபிகள் பாவம் செய்வோரைக் கடவுள் மும்முறை மன்னிப்பதாக மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள் (ஆமோ 1: 3, 6, 9, 11, 13). இதை உள்வாங்கி இருந்த பேதுரு தன்னைப் பெருந்தன்மை உள்ளவராகக் காட்டிக்கொள்ள விரும்பி இயேசுவிடம், “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால், நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? என்று கேட்கின்றார். இதற்கு இயேசு, “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை” என்கிறார்.
இதனை விளக்க இயேசு சொல்லும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை மிகவும் அற்புதமானது. உவமையில் வரும் அரசர் தன்னிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்த பணியாளரின் கடனையெல்லாம் தள்ளுபடி செய்யும்போது, அந்தப் பணியாளர் தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த வேறொருவரைப் பிடித்துச் சிறையில் தள்ளுகின்றார். பத்தாயிரம் தாலந்து என்பது மலையளவு உயர்ந்தது என்றால், நூறு தெனாரியம் என்பது மடுவளவு சிறியது. இதனால் மன்னிக்க மறுத்த அந்தப் பணியாளரை அரசர் அழுகையும் அங்கலாய்ப்பும் உள்ள இடத்திற்குத் தள்ளுகின்றார்.
இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு தம் சகோதரர் சகோதரிகளை மன்னிக்காதவர்களை விண்ணகத் தந்தையும் மன்னிக்க மாட்டார் என்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனிய மன்னன் செய்த பொற்சிலையை வணங்க மறுத்ததால் தீச் சூளைக்குள் தூக்கிப் போடப்பட்ட அசரியா, கடவுள் மக்கள் செய்த பாவங்களை மன்னித்து, அவர்கள்மீது இரக்கம் காட்டவேண்டும் என்று மன்றாடுகின்றார். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 25 இல் தாவீது, தன் இளமைக் காலத்தில் தான் செய்த பாவங்களை மன்னித்து, தன்மீது பேரன்பு காட்டுமாறு மன்றாடுகின்றார்.
யாரெல்லாம் கடவுளிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடினார்களோ, அவர்களையெல்லாம் கடவுள் மன்னித்து, அவர்கள்மீது பேரன்பு காட்டினார். நாம் கடவுளைப் போன்று மன்னிக்கக் கற்றுக் கொள்வோம். ஏனெனில், மன்னிக்கும்போதுதான் அவரது மக்களாக நாம் மாறுகின்றோம்.
சிறுவர்களின் மன்னிப்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘Newsweek’ என்ற இதழில் வெளிவந்த நிகழ்வு இது.
மேலே பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதால், அதில் பயணம் செய்த நாற்பத்தொன்று பயணிகள் இறந்து போனார்கள். இவர்களில் புனித கபிரியேல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மூன்று மாணவர்களின் பெற்றோரும் அடங்கும்.
பள்ளி நிர்வாகம் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு, அந்த மூன்று மாணவர்களின் பெற்றோருக்கும் இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தது. அப்போது அந்த மூன்று மாணவர்களில் மூத்தவன் பள்ளி முதல்வரிடம். “இரங்கல் கூட்டத்தில் எங்கள் பெற்றோரின் சாவுக்குக் காரணமாக இருந்த தீவிரவாதிகளைக கடவுள் மன்னிக்க வேண்டும் என்று மன்றாடுவீர்களா?” என்றான். இதைக் கேட்டதும் பள்ளியின் முதல்வர் வியந்து போனார்.
தன்னுடைய பெற்றோரைக் கொன்ற தீவிரவாதிகளைக்கூட, இந்தப் பள்ளி மாணவன் மன்னிக்கத் தயாராக இருந்தான். நாம் நமக்கெதிராகக் குற்றம் செய்வோரை மன்னிக்கத் தயாரா? சிந்திப்போம்.

Comments are closed.