ஆலய வரலாறு
அடைக்கல நாயகி ஆலயம் வரலாறு
பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு
ஆனைக்கோட்டை என்னும் கிராமம் மிகவும் பழமை வாய்ந்த, பரந்த பண்பாடு, கலை, கலாச்சார, விழுமியங்களை இன்றுவரை பின்பற்றும் இயற்கை எழில் மிக்க அமைதியான பிரதேசமாகும். இந்த கிராமத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே வணிகம் சம்மந்தமான தொடர்புகள் பண்டயை காலத்தி்லேயே இருந்ததாக நம்பகமான செய்திகள், சான்றுகள் உண்டு. இதற்கு எடுத்துக்காடாக இணிவில் பகுதியி்ல் அகழ்வாராட்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் சாட்சியாக இருப்பதுடன், இந்திய முதல்வர்களில் ஒருவரான கருணாநிதியும் ஒரு உரையில், யாழ்ப்பாணத்திலுள்ள ஆணைக்கோட்டை கிராமத்திற்கும் தமது இந்திய நாட்டிற்கும் வணிகத் தொடர்புகள் இருந்ததாக உறுதிப்படுத்தியுமுள்ளார்.
ஆனைக்கோட்டை பரந்த பகுதியைக்கொண்டது:
ஆறுகால்மடம், உயர்புலம், கூளாவடி, நவாலி, முள்ளி, சாவற்காடு, சுதுமலை கொக்குவில், தாவடி என பல சிறுசிறு கிராமங்களை உள்ளடக்கிய பரந்த பிரதேசமாகும். இப்பகுதி உயரப்புலம், தாழ்வுபுரம் என்னும் இரு பகுதிகளை உள்ளடக்கியதாகவே அடைக்கல அன்னை வாசம் செய்யும் பகுதி அமைகின்றது. உயரப்புலம் என்பது உயர்ந்த (மேட்டு) பகுதியாகவும், தாழ்வுபுரம் தாழ்வாகவும் (மழை வெள்ளம் இப்பகுதியில் வடிந்தோடாமல் தேங்குவது குறிப்பிடத்தக்கது) காணப்ட்டது. தற்சமயம் தாழ்வுபுரம் என்னும் பெயர் மருகி (மறைந்து) உயரப்புலம் என்னும் தனிப் பெயராலேயே அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதி நாகதாளிப்பற்றைகள், முட்புதர்கள் அன்னவன்னா, விளாமரங்கள் கொய்யா, நாவல் போன்றனவையும் கள்ளிப்பற்றைகளும் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. விளாமரங்கள் ௮திகம்காணப்பட்டதாலோ ௭ன்னவோ இன்றைய உயரப்புல பகுதி முழுவதையுமே விளாத்தியடி என்றே அழைப்பதுவழமை.
இப்பகுதி இந்து மக்கள் செறிந்து வாழும் கிராமமாகவே இருந்தது. இவ் உயரப்புலப் பிரதேசத்தில் வராளி கோவில், பிடாரி கோவில், பிள்ளையார் கோவில்,வைரவர் கோவில் என்னும் இந்து கோவில்கள் இருக்கின்றன. பிடாரி கோவில் அதாவது எமது ஊரின் அடைக்கல நாயகி வீதியை கடந்து அடைக்கல அன்னையின் சுருபத்தின் சந்தியிலிருந்து இடது பக்கமாக திரும்பிச்செல்லும் வீதியில் (ஆடியபாத வீதி) இருக்கும் ஆலமரச்சுற்றாடலின் அண்மையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கோவில் ஆகும்.
ஆனைக்கோட்டை என்னும் காரணப்பெயர் வந்தமைக்கான காரணம், என்னவென்றால், நல்லுரை இராசதானியாக (அரசமாளிகை) கொண்டு ஆட்சி செய்த தமிழ் மன்னர்களில் ஒருவர் தனது போர்பரிபாரங்களின் ஒருபிரிவான யானைப்பட்டியை இவ் உயரப்புல பகுதியிலேயே வைத்திருந்தார்.
அக்காலப்குதிகளில் மன்னர், இனிவில் பகுதியிலிருந்து நல்லூர் செல்லும் வழியில் இந்த பகுதியிற்கு வந்து தனது போர் பரிபாரங்களான யானைகளை பார்வையிட்டுச் செல்லும் போது இந்து கோவிலான பிடாரி கோவிலை தரிசித்து (வணங்கி) செல்வது அவரது வழமையான செயலாகும். எனவே, பண்டைய மக்கள் யானைகளை ஆனை என்றே ஆழைப்பது வழக்கம் இதன் காரணமாகவே ஆனைகளின் பாதுகாப்பு கோட்டையாக விளங்கிய பகுதி என்னும் நிலையில் ஆனைகள் வாழ்ந்த பகுதி ஆனைக்கோட்டையாகியது.
இக் கிராமத்தில் சிறு தொகை மக்களே ஆங்காங்கே இருந்தனர். பாதைகள் இல்லை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதானால் ஒற்றையடிப் பாதைவழியே கால் நடையாகச் சென்று வருவார்கள். இக்காலப்பகுதியில் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சின்னத்தம்பி மாடத்தா(அன்னா) இவர்கள் சில்லாலை, பாசையூரை அடியாகக் கொண்டவர்கள். தமது ஆறு பிள்ளைகளான 1. செசெரி(பெண்) 2. சலமோ(பெண்) 3. றப்பியேல்(சட்டம்பியார்) 4. சூசனா(பெண்) 5. பொன்னார்(பெண்) 6. ஞானப்பிரகாசன்(அப்பாலை) ஆகியோருடனும், உதவிக்காக அழைத்துவரப்பட்ட மாடத்தாவின் சகோதரி மகளான திரேசி என்பவருடனும் உயரப்புலம் பகுதியில் வந்து குடியேரினர். இக்கிராமத்தில் சிறுமீன்பிடி, கடலுணவு விற்பனை என்பதனையே தமது தொழிலாகக் கொண்டனர்.
இவர்கள் குடியேரிய சமயத்தில் பாடசாலைகளோ சந்தைகளோ அமைந்திருக்கவில்லை. இதனால் அயல் கிராமமான சாவற்காடு பகுதியிற்கு ஒற்றையடிப் பாதை வழியாக அதாவது எமது அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ள பகுதியூடாக சென்றுவருவர். இவ்வாறு இருக்கும் போதே இவர்களின் குடும்பத்தலைவனான சின்னத்தம்பியின் உடல் நிலை பொருளீட்ட முடியவில்லை. இதனால் மாடத்தா (அன்னா) என்னும் தாயே குடும்பபொருளாதாரத்தை சுமந்தார்.
இதன் நிமித்தம் காக்கைதீவுப்பகுதியில் கடலுணவுகளை பெற்று, சாவற்காடு பகுதியிற்குக் கொண்டு சென்று விற்றுவந்தார். மேற்சட்டை அணியாத காலத்தில் இவை நிகழ்ந்தன. மாடத்தா வழமைபோல் ஒற்றையடிப்பாதை வழியாக வரும்போது “மாடத்தா” என்று ஒரு பெண்ணின் அழைப்பொலி, மாடத்தா பயந்தார், ஆனால் அன்னையின் அழைப்பு என்பதை உணராமல் இருந்தார் மறுதினமும் அதே வழியால் வரும்போது அப்பெண்ணின் குரல், “மாடத்தா மாடத்தா” என இருமுறை அழைக்கப்பட்டது. அன்னையின் அசரீதி என உணராத மாடத்தா அங்குமிங்கும் பார்த்தார், யாருமில்லை. மூன்றாம் நாளும் அதே அசரீதி மூன்று முறை அழைப்பு.
பயந்து போன மாடத்தா, அழுத வண்ணம் தனது வீடுவந்தார். என்ன செய்வதென்று தெரியாது திகைத்து யாரிடமும் இதனை கூறாத மாடத்தா, தனது மகனான றப்பியேல் (சட்டம்பியார்) என்பவரிடம் இச் செய்தியை தெரிவித்தார். உடனடியாக கடலுணவு விற்பனை செய்து வந்த கடகப்பெட்டிகளை அப்படியே வைத்துவிட்டு, நீராடி வெண்ணிற ஆடை அணிந்து ஒரு தட்டில் (தாம்பாளம்) வெண்ணிற துணியை விரித்து எடுத்துக்கொண்டு இருவருமாக அழைப்பொலி வந்த இடத்தை அடைந்தனர்.
அப்போது சுழன்று அடித்த ஒரு காற்று வீசியது, அவ்விடத்தில் கொண்டு சென்ற தட்டை வைத்த மாடத்தா முளந்தாளிட்டு செபமாலை சொல்ல ஆரம்பித்தார், காற்று சுழன்று பலமாக வீசிய வண்ணம் இருந்தது, இலைகள், தூசுகள் தடிகள் எல்லாம் பறந்து உருண்டன, அதே சமயம் கள்ளிச்செடி ஒன்றிலிருந்து ஒளிக்கீற்று (வெளிச்சம்) வெளிவந்தது. மகன் சட்டம்பியாரும் பயந்த வண்ணம் பார்த்துக்கொண்டு நின்றார்.
காற்றின் வேகத்தில் மரக்கட்டை ஒன்று உருண்டு வந்து இவர்கள் நிலத்தில் வைத்திருந்த தட்டின் மேல் அமர்ந்து கொண்டது. அதே சமயம் காற்று நின்று அமைதியான சூழல் உருவாகியது. அவ், ஒளிக்கீற்றும் மறைந்தது. இவர்கள் மலைத்துப்போய் பயத்துடன் அத்தட்டை பார்த்த போது மரச்சிலையிலான அன்னையின் உருவமே காட்சி தந்தது.
அந்த சுருபத்தை (சிலை) இவர்கள் தமது வீடு கொண்டு வந்து வீட்டில் சிறிய குடிசை (கொட்டில்) அமைத்து மேசை வைத்து, வெண்துணி விரித்து அச்சுருபத்தை வைத்து வணங்கலாயினர். இவர்களின் வீடு உயரப்புல பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்திலிருந்து இன்று விளாத்தியடி என அழைக்கும் வீதியை ஆரம்பிக்கும் போது இருக்கும் சந்தியாகும்.
இவ்வாறு காலங்கள் செல்லச்செல்ல இச் செய்தி நாளடைவில் ஆயர் மன்றம் சென்றது.
இக் காலப்பகுதியில் வெள்ளை இனத்தவர் இருந்தனர். அச்சுருபத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அதனை றோம் நகருக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் றோமிலிருந்து இருதய ஆண்டவர் சுருபம், மாதா சுருபம், சூசையப்பர்சுருபம் ஆகிய மூன்று சுருபங்களையும் ஆலயம் அமைப்பதற்காக தந்திருந்தனர். ஆனால் சிறிய, குடிசையாக இருந்ததனால் இந்த பெரிய சுருபங்களை வைக்க முடியாத காரணத்தினால் யாழ்ப்பாண பெரிய கோவிலிலேயே (ஆலயம்) இவை பல வருடங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதுவரை எமது வணக்கத்துக்கென யாழ் ஆசன (பெரிய) கோவிலால் வேறு சுருபம் தரப்பட்டிருந்தது.
இவ்வாறு இருக்கும் போதே நமக்கென ஒரு ஆலயம் கட்ட எண்ணி அப்போது படித்து விசியம் தெரிந்தவர் என ஊர் மக்களால் மரியாதையுடன் நோக்கப்பட்ட மாடத்தாவின் மகன் சட்டம்பியார் என்பவர் ஆசிரியாக சாவற்காடு (சாவற்கட்டு) பாடசாலையில் பணிபுரிந்ததுடன், காணி அளவையாளராகவும், இன்னும் ஆங்கிலம் பேசுபவராகவும், வெளியூர் இந்தியா சென்று அங்கு வேலைகள் செய்து வரும் ஒருவராகவும் இருந்தார். இவரையே கேட்டோ என்ற பட்டப்பெயராலும் அழைப்பர். காரணம் இந்தியத் தமிழ் இவரிடம் ஒட்டிக் கொண்டதனால் கேட்டியளோ என்னும் வார்தையை இவர் அடிக்கடிபயன்படுத்தியதாலாகும்.
சட்டம்பியார் என இவரை அழைக்கக்காரணம் இவர் தலைமை ஆசிரியாகவும் இன்னும் காணிகளை சட்டம்கொண்டு அளந்து பிரிக்கும் காணிஅளவையாளரகவும் அத்துடன் எமது நாட்டு (வெள்ளையினத்தவர் உட்பட) சட்டதிட்டங்களை ஓரளவு அறிந்துவைத்துள்ள ஒரு நபராகவும் இருந்ததால் ஆகும். இவரிடமே ஆலயம் அமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அதற்கான காணியை சட்டம்பியாரே இந்து சமயத்தவர் ஒருவரிடம் வாங்கினார். இவர் இந்துப்பெண் ஒருவரையே திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் கூரைக்குத் தேவையான ஒடுகளை இந்தியாவின் இன்றைய கேரள பகுதியிலிருந்து ஆசிநீர் என்றழைக்கப்பட்ட மூன்று தோணிகளில் (வள்ளம்) காக்கை தீவுப்பகுதியிற்கு கொண்டு வந்தனர்.
கால் நடையில் மனித வலுவை பயன்படுத்தியே அனைத்து வேலைகளையும் செய்யும் முன்னேற்றம் காணப்படாத காலம் என்பதனால் ஒற்றையடிப்பாதை வழியே ஆட்களை ஆங்காங்கே நிற்க வைத்து பரிமாறப்பட்டே (கைமாறி கைமாறி ) ஒடுகள் அனைத்தும் இன்றைய ஆலயப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. இவ் ஒடுகளில் 1856ம் ஆண்டு என பதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்திற்கு தேவையான தேக்குமரத்தூண்களும் கேரளத்திலிருந்தே கொண்டு வரப்பட்டன. கல், சுண்ணாம்பு கொண்டே கட்டப்பட்டது இவ் ஆலயம் (2007 புனரமைக்க முன்னர் இருந்த ஆலயம்).
இதன் பின்னர் பெரிய கோவிலில் வைக்கப் பட்டிருந்த (றோமிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட) மூன்று சுருபங்களையும் பீடத்தின் பின் பகுதியில் அதாவது நற்கருணை பேளையின் அருகில் சேர்த்து வைக்கப்பட்டன. இவ் ஆலயத்தின் தூய்மைபடுத்தல் பாதுகாப்புப் பொறுப்பை மாடத்தா சின்னத்தம்பியின் முதல் வாரிசான செசேரி என்னும் பெண் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது.
செபம் சொல்லும், வழிபாடுகள் செய்யும் பொறுப்பை பொன்னார் என்னும் மகளிடம் ஒப்படைக்கப்பட்டது. றப்பியேல் (சட்டம் பியார்) என்னும் மகனிடம் வெளி வேலைகளை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. மூத்த மகள் செசேரி ஆலயத்தின் பாதுகாப்பிற்காக இரவில் ஆலயத்தில் தங்குவதே வழக்கமாகும். இந்நிலையில் ஆலயத்தின் பகுதியில் இருந்த கிணற்றில் (தற்சமயம் 1985களின் பிற்பாடு மூடியுள்ளனர்) அடைக்கல அன்னையும் குழந்தை இயேசுவும் நீராடியபின் குழந்தை இயேசுவை கைகளினால் பிடித்து கூட்டிவந்து ஆலயத்தினுள் தனது இடத்தில் அமர்வதை செசேரி தனது கண்களால் பலமுறை அருகில் இருந்து பார்த்து வந்துள்ளார்.
இதன் காரணமாகவோ என்னவோ எமது ஊர் மக்கள், தொற்று நோய்கள் பரவும் பொழுது (வெப்பநோய்) மாலை புலர்ந்ததும், அல்லது அதிகாலையில் அக்கிணற்றில் நீராடி தமது உடலை குளிர்ச்சிபடுத்தி நோய்களை போக்குவதை வழக்கமாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல ஆண்டுகள் சென்ற பின்பும் இக்காட்சியை அதாவது அன்னை நீராடி வெண்ணிற ஆடை அணிந்து மகனுடன் சென்று கோவிலுக்குள் அமர்வதை பலர் கண்டுள்ளனர். இதன் காரணமாக தமது வேலைகளை முடித்து ஆலய வழியால் வீடு திரும்பும் போது அக்கிணற்றில் தண்ணீர் எடுத்து முகம் கை கால் கழுவி, நீரை பருகி விட்டே தமது பயணத்தை தொடர்வர்.
ஆனால் இதன் முக்கியத்துவம் தெரியாமல் இக்கிணற்றை மூடியமை பெரும் தவறு என எண்ணத் தோன்றுகின்றது.
1875-1897 ஆண்டுகளின் காலப்பகுதியில் ஐயன்பாதர்(IYEN FATHER) என்று அழைக்கப்பட்ட வெள்ளையின அருள் தந்தை ஒருவரே ஆலய வழிபாடுகளை செய்து வந்தார். 1892-1894 காலப்பகுதியில் இவ் ஆலயம் யாழ்ப்பாணம் பெரிய கோவிலுடன் ஆசனப்பங்காக இணைக்கப்பட்டது. 1894-1898 காலப்பகுதியில் திறப்பு விழா நடைபெற்று, முதல் பங்குத்தந்தையாக 1897 இல் லூயஸ்பாதர் பெறுப்பேற்றுக்கொண்டார். காலோட்டத்தின் பயனாக செசேரி தனது ஆறு பிள்ளைகளில் மூத்த மகளான ஞானமுத்து (யோண்) அன்னம் (இரட்டைகளில் ஒருவர்) என்பவரிடம் இப் பொறுப்பை ஒப்படைத்தார்.
தொடர்ந்து ஞானமுத்து அன்னம் என்பவரே ஆலயத்தின் அனைத்து பொறுப்புக்களையும் செயர்பாடுகளையும் கவனித்தார். 1920-1929க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் (1ம் உலகயுத்தம் முடிந்தபின்)ஆலய வளாகத்தில், வெள்ளையின கத்தோலிக்கத் திருச்சபையினால், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அமைக்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரையிலேயே முதலில் அமைத்திருந்தனர்.
இங்கு தான் எமது ஊரை சோர்ந்த அனைத்து மாணவர்களும் கல்வி கற்றனர். மேற்படிப்பைத் தொடர விரும்புவோர் நாவாந்துறைக்குச் சென்று கற்று வந்தனர். சில ஆண்டுகளின் பின்னர் பத்தாம் வகுப்புவரை கட்டப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு காலங்கள் செல்ல வெள்ளையின பங்குத்தந்தையாக இருந்தவரின் பாதுகாப்பில், வேலைசெய்து, அவரினால் பராமரித்து வந்த ஒருவருக்கு ஆனையூர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளால், பிரச்சனைகளை விரும்பாத ஞானமுத்து அன்னம், தனது பொறுப்புகளை மாடத்தா சின்னத்தம்பியின் ஐந்தாவது மகளான, பொன்னாரின் மகன் திரவியத்திடம் (செசேரியின் சகோதரிமகன்) ஒப்படைத்தார். வெள்ளையர்கள் வெளியேறிய பின்னரும் சிறிதுகாலங்கள் வெள்ளையின குருக்கள் பணியாற்றி வந்தனர்.
தொடர்ந்து காத்தோலிக்க மறை திருச்சபையினரே அனைத்து பொறுப்புகளையும் கவனித்தும் கொண்டிருந்தனர். இவ்வேளையில் இலங்கை அரசாங்கம் பெருமளவிலான பாடசாலைகளை தனது கட்டுப்பாட்டின் (சூவீகரித்தல்) கீழ் கொண்டுவர முடிவு செய்து செயலில் இறங்கியது. இதன்காரணமாக ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்துடன் சேர்ந்த காணியை விற்க முடிவு செய்தனர்.
ஆனால் மாடத்தா வம்சத்தினரும், பொதுநலனின் அக்கறை தூரநோக்குக் கொண்டவர்களும் , புத்தி ஐீவிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் தூர நோக்குகளற்ற சில ஆலய நிர்வாகத்தினரின் செயலால் பாடசாலை முன்பாக இருக்கும் காணி விற்கப்பட்டது. அதாவது தற்சமயம் வரவேற்புமாதா இருக்கும் பகுதியின், பாடசாலை பாதையின் அருகே அமைந்துள்ள ஒழுங்கையில் வரும் காணியே விற்கப்பட்ட காணி என்பது குறிப்பிடத்தக்கது.






